திருச்சி: திருச்சியில் நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் கணவன், மனைவியை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு நடந்த இந்த துணிகர சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த தளவாய்பட்டியில் வசித்து வருபவர் மகாலிங்கம் (73). இவரது மனைவி கமலவேணி (60). இருவரும் நேற்று இரவு (ஏப்ரல் 8) வீட்டில் இருந்த போது வெளியில் நாய் குறைக்கும் சத்தம் கேட்டு மகாலிங்கம் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நான்கு பேர் மகாலிங்கத்தை வீட்டிற்குள் தூக்கிச் சென்றுள்ளனர்.
இதற்கிடையில் அவரது மனைவி வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். அவரையும் பார்சல் ஒட்ட பயன்படுத்தப்படும் செலோ டேப் மூலம் இருவரையும் கட்டி போட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் கமலவேணி அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க செயின் மற்றும் காதில் அணிந்திருந்த ஒரு சவரன் தோடு ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து தம்பதி இருவரும் கட்டி இருந்த டேப்பை வாயால் கடித்து அவிழ்த்து உள்ளனர். இதனை அடுத்து மகாலிங்கம் துவரங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கோவை ஆன்லைன் விற்பனை நிறுவன குடோனில் அதிரடி ரெய்டு! பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் இதோ!
மேலும், திருச்சியில் இருந்து மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி அருகே துவரங்குறிச்சியில் நள்ளிரவு நேரத்தில் முகமூடி கொள்ளையர்கள் தம்பதியை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 15 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தம்பதியை கட்டிப்போட்டு பீரோவில் இருந்த நகைகளையும், பெண்மணி அணிந்திருந்த நகையையும் கொள்ளையர்கள் கொள்ளை அடித்திருக்கும் இந்த துணிகர சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்