கிருஷ்ணகிரி: நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் (மக்களவை, மாநிலங்களவை) நடந்த சூடான விவாதங்களுக்குப் பிறகு, பெரும்பான்மை அடிப்படையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 12) ஜமாத்துல் உலமா சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) காலையிலேயே ஓசூரில் ஜமாத்துல் உலமாவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார். அப்போது மேடையில் பேசிய அவர், “அடிப்படையான மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசை மாற்றுவதற்காகவே சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளாக மணிப்பூரில் கலவரம் ஓயவில்லை.

அங்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. அமெரிக்க அரசு இந்திய பொருள்களுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி போட்டு இருக்கிறது. அதற்கு எதிராக பேச அவருக்கு துணிச்சல் இல்லை. விவசாயிகளின் போராட்டங்கள் நீடித்துக் கொண்டிருக்கிறது. தாங்கள் விளைவித்த விவசாய பொருள்களுக்கு உற்பத்தி விலையை நிர்ணயம் செய்ய சட்டம் கேட்டு போராடுகிறார்கள்.
அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இவற்றையெல்லாம் மடை மாற்றுவதற்காக தான் சிறுபான்மை விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது கடும் எதிர்ப்பையும் மீறி, நள்ளிரவில் புதிய வக்ஃப் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். நாடெங்கும் இதற்கு எதிரான போராட்டம் அலைகள் பரவிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து நாம் மதச்சார்பற்ற தன்மையுடனும், ஜனநாயக தன்மையுடனும் எல்லோருடனும் இணைந்தும் போராட வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசும் போது வக்ஃப் நிர்வாகத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். அவர் பொய் சொல்லி இருக்கிறார். ஆனால், இச்சட்டத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. இச்சட்டப்படி 12 ஆண்டு காலம் ஒருவர் வக்ஃப் சொத்தை அனுபவித்திருந்தால், அவர் உரிமையாளர் ஆகலாம் என சொல்லப்பட்டுள்ளது.
முன்பு வக்ஃப் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால், அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காது. ஆனால், இப்போது ஜாமீனில் வெளிவரும் வகையில் அச்சட்டம் பலவீனப்பட்டுள்ளது. இவ்வாறு, இச்சட்டம் பல முரண்பாடுகளோடு இருக்கிறது. இது ஒரு மக்கள் விரோதச் சட்டம்ம் ஜனநாயகத்திற்கு எதிரான சட்டம். இச்சட்டத்திற்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும்.
இதையும் படிங்க: வரலாற்றில் முதல் முறை: ஏப்ரல் 16 ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் துணை வேந்தர்கள் கூட்டம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு! |
எல்லோரும் இந்த விஷயத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களையும் போராட்ட களத்தில் பங்கேற்க அழைப்பு கொடுக்க வேண்டும். வன்முறையற்ற அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். இஸ்லாமியர்களை கோபப்படுத்தி அவர்களை வன்முறையின் பக்கம் தள்ளுவது என்பது, ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் திட்டம். அதன் மூலம் இந்துக்களையும், இஸ்லாமியர்களையும் பிரிக்க வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம். இவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் தொடர்ந்து போராடுவோம். ஒரு போதும் நாம் பாசிசத்திற்கு அடங்கி போக வேண்டியதில்லை” என கூறினார்.
இந்த நிகழ்வில் ஓசூர் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ், தளி சட்டமன்ற உறுப்பினர் T. ராமச்சந்திரன், ஓசூர் மாநகர மேயர் சத்யா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வுக்கு மாவட்ட ஜமாஅத்துல் உலமா கௌரவ தலைவர் மௌலானா ஹாபிஸ் நயீம் ஜான் தலைமை தாங்கினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.