திருநெல்வேலி: நெல்லை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று (ஏப்ரல் 13) மாலைஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் எதிர்புறம் பேசிய மர்ம நபர் ஒருவர், '' நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். மருத்துவமனையை இன்னும் சில நொடியில் தரைமட்டமாக்கி விடுவேன்'' என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனடியாக மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின்பேரில் மாநகர துணை ஆணையர் வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் ஐகிரவுண்டு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பல்நோக்கு மருத்துவமனைக்கு நேற்று இரவு விரைந்தனர்.
அங்கு மருத்துவமனை வளாகம் மற்றும் 7 மாடிகளிலும் உள்ள வார்டுகள், வாகனங்கள் நிறுத்துமிடம் என அனைத்து பகுதிகளிலும் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கவில்லை.
இதனால் மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பை ஆய்வு செய்தபோது அந்த செல்போன் எண்ணின் சிக்னல் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியை காட்டியது. இதையடுத்து உவரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் விடிய விடிய தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் உவரியை அடுத்த குஞ்சன்விளையை சேர்ந்த முத்து பெருமாள் (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்று முத்து பெருமாளை உவரி போலீசார் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது; '' முத்து பெருமாள் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து அவரது மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பல்நோக்கு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவர் வந்துள்ளார்.
இதையும் படிங்க: தேனி மலைப்பகுதியில் கவிழ்ந்து பற்றி எரிந்த கார்; பயணிகள் நால்வரின் நிலை என்ன?
அப்போது சிகிச்சை பெற உள்நோயாளியாக சேர வேண்டும். அவ்வாறு சேரும் பட்சத்தில் கவனித்துக்கொள்ள ஒருவர் கூடுதலாக இருக்க வேண்டும் என்று கூறி அவரை மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரத்தில் மது குடித்த முத்து பெருமாள் தனது வீட்டுக்கு சென்று அங்கிருந்து மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இவர் ஏற்கனவே இதேபோல் குடும்ப பிரச்சினையில் அடிக்கடி 100-க்கு போன் செய்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
குடிபோதையில் ஒருவர் நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மருத்துவமனையை பரபரப்பாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்