சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " ராஜ்யசபா சீட்டுக்கு நன்றி சொல்ல வந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு வரவில்லை.
ராஜ்யசபா எம்.பி. யார் என்று கட்சியில் முடிவு செய்த பிறகு அப்போது நன்றி சொல்ல வருவோம். இப்போது நன்றி சொல்ல அல்ல கொண்டாட வந்தோம்.
தமிழக ஆளுநர் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வந்த தீர்ப்பு நமக்கு சாதகமான தீர்ப்பு என்று சொல்வதை விட இந்தியாவிற்கே சாதகமான ஒரு தீர்ப்பை தமிழக அரசு போட்ட வழக்கினால் வந்திருப்பது என்பது கொண்டாடப்பட வேண்டியது. அந்த கொண்டாடத்திற்கு வந்தேன். இதில் என்ன உதவி செய்ய வேண்டும் என்றாலும் செய்வோம். தொகுதி மறுசீரமைப்பு பற்றி முதலமைச்சரிடம் பேசவில்லை." என்று கமல் ஹாசன் கூறினார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு," தேர்தலுக்கு ஓராண்டு முன்பு அவசர பட வேண்டியதில்லை. அதிமுக - பாஜக கூட்டணி பற்றி நீங்கள் பேசுங்கள்; நிறைய பேசுங்கள்." என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.