மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சித்ராவிஜயன், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோயில் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின்போது கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு மே 8 ஆம் தேதி முதல் வைகை அணையில் இருந்து விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீனாட்சியம்மன் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறவுள்ளது. மே 6 ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், மே 8 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், மே 9 ஆம் தேதி மீனாட்சியம்மன் கோயில் திருத்தேரோட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கள்ளழகர் கோயில் சித்திரை பெருவிழா மே 8 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை 10 நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெற உள்ளதாகவும், விழாவின் சிகர நிகழ்வாக சித்ரா பௌர்ணமியான மே 12 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுதல் நடைபெற உள்ளதாகவும் இரண்டு கோவயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ''ஜெயலலிதாவை விமர்சித்தவர்களுக்கு விருந்து'' - எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய கனிமொழி!
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைகையாற்று பகுதி, கோரிப்பாளையம், செல்லூர் ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் கூடுதல் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா கூட்டத்தில் வலியுறுத்தினார். கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலத்தின் அருகே மேம்பால பணிகள் நடைபெறுவதால் விஐபி வாகனங்கள் நிறுத்துவதில் குறைந்த அளவிற்கே அனுமதி அளிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் குழாய் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அதை விரைந்து முடிக்கவும் அல்லது தற்காலிகமாக பயன்படுத்தும் வகையில் சீர்படுத்தவும் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். வைகையாற்று பகுதியில் ஆகாய தாமரை செடி காணப்படுவதால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுப்பணித் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள தரைவழியில் மின்கம்பிகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. மழை பெய்தால் மழைநீர் தேங்கும் என்பதால் சாலைகள், தெரு விளக்குகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
மேலும் மதுரை மாநகர பகுதிகளில் சித்திரை திருவிழாவின்போது தொலைத் தொடர்பு மற்றும் கேபிள் டிவிக்களுக்கான இணைப்பு கேபிள்கள் உயரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வில் 10 லட்சம் பக்தர்கள் வரை பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தின்போது மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகம் மின் நுகர்வு கட்டணம் ரூபாய் ஒரு கோடி நிலுவை வைத்துள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த தவறினால் கோயிலில் மின்சார இணைப்பிற்காக கோயில் நிர்வாகம் மாற்று வழிகளை ஏற்படுத்திக்கொள்ள மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்