மதுரை: நெல்லையைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், 'கடந்த 2021ஆம் ஆண்டு 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே வார்டு நிர்ணயம் மற்றும் ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் மக்கள்தொகை பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டபோது, வார்டு மறு வரையறை மற்றும் ஒதுக்கீடு தொடர்பாக முடிவு செய்யப்பட்ட பின்னரே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால் தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் வாக்காளர் பட்டியலில் பாதி வாக்காளர்களின் புகைப்படம் இன்றி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் காலிப் பதவியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்று இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும் வார்டு ஒதுக்கீட்டையும் முடிவு செய்ய இடைக்கால உத்தரவிடுவதோடு, அதன் பின்னர் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி அமைப்புகளில் காலிப் பணியிடத்திற்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: காவல் உயர் அதிகாரி அலுவலக பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - விசாரணை நடத்த உத்தரவு!
இந்த வழக்கு நீதிபதிகள் ஸ்ரீமதி, விஜயகுமார் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், 2024ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் அரசு உறுதி அளித்தது தொடர்பான வழக்கின் உத்தரவு நகல் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், "வாக்காளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்று இருப்பதை உறுதி செய்வதோடு, வார்டுகள் ஒதுக்கீடு குறித்த முடிவு செய்யப்பட்ட பின்னர் உள்ளாட்சி அமைப்புகளில் காலிப் பதவியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும்." என இடைக்கால உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.