மணக்கும் மதுர மல்லி... மணக்காத விவசாயிகள் வாழ்க்கை... சென்ட் ஆலை அமைக்கப்படுவது எப்போது?
மதுரை மாவட்டத்தில் மட்டும் 1,729 ஹெக்டேர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. 4 ஆயிரம் விவசாயிகள் மல்லி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Published : October 10, 2025 at 4:55 PM IST
By இரா.சிவக்குமார்
“மதுரை மல்லி என்றாலே தனி மணமும், அடையாளமும் உண்டு. ஆனால், விவசாயிகளின் வாழ்க்கையோ மணம் வீசவில்லை. காரணம் உரிய விலை கிடைக்காதது தான். எனவே, நறுமண ஆலை, குளிர்பதனக் கிடங்குகள் அமைக்க வேண்டும் என காத்திருக்கிறோம். மணம், தரம், குணத்தால் உலகளவில் போற்றப்படும் மதுரை மல்லியை சாகுபடி செய்யும் எங்களின் வாழ்க்கையில் எப்போது தான் மணம் வீசும்?” என விவசாயிகள் கவலையோடு கேள்வி எழுப்புகின்றனர்.
மணம் வீசும் மதுரை மல்லி
மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மனும், மல்லியும் தான். மதுரை மல்லிக்கென்று தனித்துவமான அடையாளம் உண்டு. மற்ற மல்லி பூக்கள் ஒரே நாளில் வாடிவிடும். ஆனால், மதுரை மல்லி இரண்டு நாள்கள் வரை வாடாமல் மணம் வீசும். இதனாலே இந்த மல்லிக்கு உலகளவில் மவுசு அதிகம். நேர்த்தியான மொட்டு, விரிந்த இதழ்கள், தனித்துவமான நறுமணம், பூவும் - காம்பும் சம உயரம், தடிமனான காம்பு ஆகியவை மதுரை மல்லியின் தனிச் சிறப்புகளாகும்.
இது தவிர மண்ணின் வளமும் மல்லியின் மணத்திற்கு முக்கிய காரணமாகும். மதுரை மாவட்டத்தில் செல்லம்பட்டி, கள்ளிக்குடி, சேடபட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி ஆகிய வட்டாரங்களில் மல்லிகை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை தான் மதுரை மல்லி என அழைக்கப்படுகின்றன. சந்தையில் விற்கப்படும் அனைத்து மல்லியும் மதுரை மல்லி ஆகாது. இதனாலே, மதுரை மல்லியை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
மல்லிகை விளைச்சல்
தமிழ்நாட்டின் மொத்த மல்லிகை விளைச்சலில், மதுரை மாவட்டத்தின் பங்கு மட்டும் ஏறக்குறைய 9 சதவீதம். மாநிலத்தின் மொத்த மல்லிகை சாகுபடி பரப்பளவில் இந்த பகுதியின் பங்கு மட்டும் 10 விழுக்காடு. நாளொன்றுக்கு மதுரையில் மட்டும் டன் கணக்கில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு மட்டும் மதுரை சுற்றுவட்டாரத்தில் 19,365 டன் மல்லிகை பூக்கள் சாகுபடி செய்யப்பட்டன. இதில், அதிகபட்சமாக திருப்பரங்குன்றம் வட்டாரத்தில் 5,213 டன் மல்லிகை விளைச்சல் செய்யப்பட்டுள்ளது.

மல்லிகை விவசாயிகள் வேதனை
ஆனால், தற்போது மல்லி செடிகள் குருணைப்புழு தாக்குதலுக்கு ஆளாகி தரம் குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பேசிய ஒ.ஆலங்குளம் பகுதி விவசாயி சிவசக்திவேல், “நான் பரம்பரை பரம்பரையாக மல்லி விவசாயம் செய்து வருகிறேன். முன்பு இருந்தது போல் இல்லாமல் தற்போது மல்லிகை செடிகளில் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று நன்றாக இருக்கும் பூ, மறுநாள் பறிக்கும் போது குருணைப்புழு தாக்கியிருக்கும். மல்லி செடி நடவு நட்ட தொடக்கத்தில் 5 மருந்துகளும், மொட்டு விட துவங்கிய ஒரு வாரத்திற்குள் மூன்று முறையும் மருந்து அடிக்க வேண்டி சூழல் உள்ளது.
மருந்துகள் விலை அதிகமாக உள்ளது. முன்பெல்லாம், 50 சென்ட் நிலத்தில் 100 கிலோ மல்லிகைப்பூ விளைச்சல் இருக்கும். ஆனால், தற்போது 25 கிலோ எடுப்பதே பெரிய சவாலாக உள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி பூ விளைச்சல் இருக்கும் சமயத்தில் விலை கிடைப்பதில்லை. மல்லிகை பூவிற்கு குளிர் பதனக்கிடங்குகள் அமைத்து தருவோம். சென்ட் ஆலை அமைத்து தருவோம் என்று அரசியல் கட்சியினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால், இதுவரை அது நடக்கவில்லை” என வேதனையுடன் தெரிவித்தார்.
உரிய விலை வேண்டும்
“என்ன தான் பல மருந்துகளை வாங்கி அடித்தாலும், எந்த பலனும் இல்லை. இதனால், மல்லி விவசாயம் செய்யும் நாங்கள் ஏழைகளாகவே உள்ளோம்” என விவசாயி சுப்பையா ஆதங்கத்தை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “மல்லிகை விவசாயத்தால் பொருளாதாரரீதியாக எந்த பயனும் இல்லை. விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். அதே போல், வேளாண் துறை அலுவலர்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, திருமங்கலம் தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்னவயல் காளிமுத்து கூறுகையில், “மதுரையின் தென்பகுதியில் தான் அதிகமான மல்லிகை விவசாயம் நடைபெறுகிறது. மதுரையின் அடையாளமே இந்த குண்டு மல்லி தான். மல்லி விலை ஆண்டு முழுவதும் ஒரே சீராக இருப்பதில்லை. விழா காலங்களில் அதிகமாகவும், மற்ற நேரங்களில் மிகக் குறைவாக இருக்கிறது. மல்லி விவசாயத்திற்கான பெரும் செலவு மருந்து அடிப்பதற்கே போய் விடுகிறது.
மதுரை மல்லிக்கான சந்தை வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை என இரண்டு வழிகளில் மட்டுமே உள்ளது. உள்ளூர் சந்தை குறைவாகவே உள்ளதால், நீடித்த நிரந்தர வருமானம் இல்லை. மல்லிகை விவசாயிகளுக்காக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்” என்றார்.
1,729 ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி
மல்லிகை மேம்பாட்டிற்கு என்று தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக, மதுரை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநர் பிரபா தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “மதுரையில் மல்லிகை மிக முக்கிய விளைபயிராகும். மதுரையில் மட்டும் 1,729 ஹெக்டேர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இதில், அதிகபட்சமாக திருப்பரங்குன்றத்தில் 465 ஹெக்டேர், செல்லம்பட்டியில் 290, உசிலம்பட்டி 417 ஹெக்டேர் பயிர் செய்யப்படுகிறது. 4 ஆயிரம் விவசாயிகள் மல்லிகை விவசாயம் செய்கின்றனர்.
மதுரையில், ராமநாதபுரம் குண்டுமல்லி (Jasmine sambac), பிச்சி (Jasmine grandiflorum), முல்லை (Jasmine auriculatum) என மூன்று வகை மல்லி சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், மல்லிகைக்கான சாகுபடி பரப்பை, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 100-ல் இருந்து 125 ஹெக்டேராக அதிகரித்து வருகிறோம். ஒரு விவசாயிக்கு ரூ.15 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல், மல்லிகை நாற்றுகளை தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறோம். செடிகளை கவாத்து செய்வதன் மூலமாக உற்பத்தியை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மல்லிகை விவசாயிகளுக்கு குளிர்பதன பெட்டிகளும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. மல்லி பூவை ஏற்றுமதி செய்வதற்குரிய பயிற்சிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மல்லிகை உற்பத்தி இடத்திற்கு அருகிலேயே மல்லிகை சந்தை, நறுமண ஆலை (Scent Factory), குளிர் பதனக்கிடங்குகள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான மல்லிகை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளோம்” என்றார்.

