- By இரா. சிவக்குமார்
மதுரை: இந்தியாவில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாம்புக் கடியால் உயிரிழக்கும் மோசமான சூழல் நிலவுகிறது. பாம்புக் கடியால் அதிகமான நபர்கள் இறக்கும் நாடுகளில் முதன்மையானதாக இந்தியா திகழ்கிறது. இந்தியா கிராமப்புற நாடாக உள்ளதாலும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை கிடைக்காத காரணத்தாலும் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பாம்பு கடி குறித்த கணக்கெடுப்பு மற்றும் விழிப்புணர்வில் கல்லூரி மாணவிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாம்புகள் குறித்த விழிப்புணர்வு:
அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் கரிசல்பட்டி, ஆலம்பட்டி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தங்களாச்சேரி உள்பட சுமார் 156 கிராமங்களில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த நபர்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்வதுடன், பாம்பு கடிக்கு முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது மற்றும் பாம்புகளும் வாழ்வது இயற்கை சமநிலைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்த தகவல்களையும், விழிப்புணர்வையும் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் கிராம மக்களுக்கு வழங்கி வருகின்றனர். கள நிலவரம் குறித்து அறிந்து கொள்ள நமது ஈடிவி பாரத் தமிழ் நிருபர் சம்பவம் இடத்திற்கு சென்றிருந்தார்.

அழிந்து வரும் பாம்புகள் இனம்:
பாம்புகளின் பாதுகாப்பே முக்கியம் என மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் விலங்கியல் பயிலும் மாணவி மீனாட்சி பேசுகையில், "கோடை விடுமுறை என்பதால் கிராமப்புற மக்களுக்கு பாம்புகள் மற்றும் விலங்குகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பாம்புகளை பாதுகாப்பதே எங்களுடைய முயற்சி. ஆனால், மனிதர்களோ பாம்புகளுக்கு பயந்து அவற்றை கொல்கின்றனர். அதுகுறித்து கேட்டாலும், தகவல்களை மறைக்கப்படுகிறது. இது ஒரு கணக்கெடுப்பு மட்டுமே என மக்களுக்கு புரியவைத்து தகவல்களை பெறுகின்றோம்.
பாம்புகள் இனம் அழிந்து கொண்டே வருகிறது. ஆகையால், பாம்புகளை பாதுகாப்பதுதான் எங்களது முதல் முயற்சியாக உள்ளது; அதனோடு இணைந்து மக்களையும் பாதுகாக்கிறோம். எல்லா பாம்புகளும் விஷப்பாம்புகள் அல்ல என்றும், விஷப்பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், எங்கு சிகிச்சைக்கு செல்ல வேண்டும் எனவும் நாங்கள் அவர்களிடம் கூறினோம். பாம்பின் முக்கியத்துவத்தை புரிய வைத்த பின்னர், இனிமேல் பாம்புகளை கொல்ல மாட்டோம் என பெரும்பாலான மக்கள் கூறியுள்ளனர். இனி பாம்பு கடித்தால் கூட அவர்கள் அச்சப்பட மாட்டார்கள்" என மாணவி மீனாட்சி கூறினார்.
பாம்பை உண்ணும் இந்திய மக்கள்?
அதனைத் தொடர்ந்து பேசிய மாணவி ரிஷிவந்திணி, "கிராம மக்களிடம் இருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். இது ஒரு புதிய அனுபவமாக உள்ளது. முதலில், மனிதர்கள் பாம்பு கடிக்கு எப்படியெல்லாம் ஆளாகுகிறார்கள் என்பதை அறிந்த போது கவலை அளித்தாலும், சில இடங்களில் பாம்பை உணவாக சாப்பிடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெக்னாலஜி வளர்ந்தும் மக்களுக்கு புரிதல் இல்லை:
அதேபோல, அமெரிக்கன் கல்லூரியில் எம்எஸ் பயிலும் மாணவர் வித்தோஷ்குமார் கூறுகையில், "ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பாம்புகள் பற்றிய விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றோம். உதாரணமாக, பாம்பு கடித்தால் என்ன செய்வது? என்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளோம். இதில் நஞ்சுள்ள பாம்பு மற்றும் நஞ்சற்ற பாம்பு எது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. நஞ்சற்ற பாம்பு கடித்தால் கூட இறந்து போய் விடுவோம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.
ஆகையால், பாம்பைக் கண்டதும் கொன்று விட வேண்டும் என்ற மனநிலையில் தான் உள்ளனர். ஆனால், உலகில் சுமார் 15% பாம்புகள் மட்டுமே நச்சுத்தன்மை கொண்டவை. இந்த நவீன காலகட்டத்திலும் கூட பாம்புகள் குறித்த புரிதல் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள் என்பது வேதனையாக உள்ளது. அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு தரப்படவில்லை," என வருத்தத்துடன் தெரிவித்தார்.

நாகம் விவசாயிகளின் தெய்வம்:
திருமங்கலம் அருகே தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்னவயல் காளிமுத்து கூறுகையில், “பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வில் விவசாயியாக நான் ஒரு சில கருத்துக்களை மக்களிடம் சேர்க்க நினைக்கிறேன். பொதுவாக நாகப்பாம்பின் சிலை இருக்கும் இடம் ஒரு நல்ல நீர் பிடிப்பு பகுதி. அதாவது பூமியில் உள்ள தண்ணீர் என்பது புவியின் வெப்பத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு இடம். அதை எடுத்து பயன்படுத்துவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. எனவேதான் அந்த இடத்தில் நாகர் சிலையை வைக்கின்றனர்.
பூமி அனைத்து உயிரினங்களும் சமம்:
பொதுவாக, விவசாயம் செய்பவர்களுக்கு பாம்பு ஒரு குலதெய்வமாக உள்ளது. ஏனென்றால் அது விவசாயத்தை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் எலிகளை அழித்து விவசாயத்திற்கு முக்கிய பங்கு ஆற்றுகிறது. பழங்காலத்தில் பாம்புகள் ஒரு வளர்ப்பு பிராணியாக இருந்தன. இப்போது மனிதர்களுக்கு விரோதமாக சித்தரிக்கப்படுகின்றன. எல்லா உயிரினங்களும் பூமியில் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். இதனை எல்லோரும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த பூமியில் அனைத்து உயிர்களும் சமமாக வாழும் நிலை உருவாகும்” என அன்னவயல் காளிமுத்து கூறினார்.

ஊர்வன அமைப்பின் நிர்வாகி விஷ்வா கூறுகையில், "மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை மற்றும் இறகுகள் அமிர்தா அறக்கட்டளையும் இணைந்து மக்களுக்கும், பாம்புகளுக்குமான உறவு எவ்விதமாக உள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காகவும், பாம்பு கடி குறித்த மக்களுடைய புரிதல் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று இதன் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இந்தியாவே முதலிடம்:
திருமங்கலம் பகுதியில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் பயணம் மேற்கொண்டு கல்லூரி மாணவிகள் மக்களை சந்தித்து கருத்துக்களை பதிவு செய்கின்றனர். அதேபோல், கிராமத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த குடும்பங்களை சந்திக்கிறோம். பாம்பு கடியால் பாதிக்கப்பட்டு மீண்ட மக்களை சந்தித்து, அவர்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்கிறோம். அவர்கள் எந்த மாதிரியான மருத்துவ சிகிச்சை பெற்றனர் என்பது பற்றிய தகவல்களை சேமிக்கிறோம். இதன்வாயிலாக, எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர்? பாம்பு கடிக்கான மருத்துவ கட்டமைப்பு உள்ளதா? எனவும் அறிந்து கொள்ள இந்த விழிப்புணர்வு பயணத்தை துவங்கியுள்ளோம்.
இதையும் படிங்க: எலியா? பாம்பா? கடித்தது எது என்ற குழப்பத்தில் நேரம் தாழ்த்தி சிகிச்சை! உயிரிழந்த மூதாட்டி!
2030-ல் பாம்பு கடியை பாதியாக குறைப்பதை இலக்காகக் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஏனென்றால், உலகம் முழுவதும் 5 மில்லியன் பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2.5 மில்லியன் மக்கள் நஞ்சுள்ள பாம்பால் பாதிக்கப்பட்டு, 1.60 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். அதில் இந்தியா தான் முதலிடம், ஏனென்றால் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள மோசமான சூழல் நிலவுகிறது. இந்தியா கிராமப்புற நாடாக உள்ளதால், இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டே உள்ளன.
விபத்தை விட குறைவுதான்:
பாம்பு கடி என்பது சாதாரணமல்ல, அதேபோல் சாலை விபத்தை விட பாம்பு கடி மிகவும் குறைவுதான். பாம்பு கடியை நாம் தவிர்க்கலாம். வீட்டை சுற்றி பாம்பு வராமல் இருப்பதற்கும், பாம்பு கடி இல்லாமல் வாழ்வதற்கும் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவே கிராம மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.

பாம்பு கடித்து இறப்பதையும் பதிவு செய்யவும்:
அண்மையில் தமிழக அரசு பாம்பு கடி விபத்தை அறிவிக்கக்கூடிய ஒரு நோயாக அறிவித்துள்ளது. இதற்கு காரணம், பல்வேறு பாம்பு கடி மரணங்கள் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை. இதனால் பல்வேறு தவறான தகவல்கள் வருகின்றன. பாம்புக்கடியால் இறந்தவர்களை உடற்கூறாய்வு செய்த பின், வீட்டுக்கு கொண்டு வருவதை நிறைய பேர் விரும்புவதில்லை.
ஆகையால் பாம்பு கடி மரணங்களை வேறு சில நோய்களால் ஏற்பட்ட மரணமாக பதிவு செய்து விடுகின்றனர். இதனால் பாம்பு கடி மரணங்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியே தெரிவதில்லை. இதன் காரணமாக, அரசால் கூட சரியான மருத்துவ கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. எனவே, பாம்பு கடித்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், முறையான இழப்பை பதிவு செய்ய வேண்டும், அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என மக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம்,” என்றார்.
மேலும், ரவீந்திரன் நடராஜன் தலைமையில் டோக் பெருமாட்டி கல்லூரி மாணவிகளும், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி மாணவிகளும் இந்த களத்தில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த தகவல்களின் அடிப்படையில் ஒரு ஆய்வறிக்கையை அரசுக்கு விரைவில் நாங்கள் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.