மதுரை: இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கும் மனுக்களை முறையாகப் பரிசீலனை செய்து மனுதாரர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.
மேலும், இனிமேல் பட்டா கேட்டு இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் எனவும், இந்த உத்தரவைத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் அனுப்ப வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், “என் சொத்துக்குப் பட்டா கேட்டு இ-சேவை மூலம் விண்ணப்பித்தேன். ஆனால், எனது விண்ணப்பத்தை ராஜபாளையம் வட்டாட்சியர் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பிறப்பிக்கும் முன்பு என்னை விசாரிக்கவில்லை. ஆவணங்களைக் கேட்கவில்லை. எனவே, வட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்து எனக்குப் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று மார்ச் 19ஆம் தேதி நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பட்டா கோரி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, அந்த விண்ணப்பத்தின் முடிவு ஆன்லைன் வழியாகவே தெரிவிக்கப்படும். ஆன்லைன் விண்ணப்ப முறை இப்படித்தான் உள்ளது. அதன் பிறகு அந்த உத்தரவு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகலாம் என்பது விதி எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரிக்காமல், கோரிக்கையை நிராகரிக்கக்கூடாது. ஆனால், இந்த வழக்கில் மனுதாரரை விசாரிக்காமல் அவரது ஆன்லைன் பட்டா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதில், உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. இதனால், மனுதாரரின் மனு மீண்டும் வட்டாட்சியருக்கு அனுப்பப்படுகிறது. வட்டாட்சியர் மனுதாரரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களைப் பரிசீலித்து அடுத்த எட்டு வாரத்தில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இனிமேல் பட்டா கேட்டு இ-சேவை மையம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.
இந்த உத்தரவு நகலை உயர் நீதிமன்ற பதிவாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இதனைப் பெற்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதலைப் பிறப்பிக்க வேண்டும்,” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.