சென்னை: கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடர்பாக கடந்த 2023இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை பின்பற்றாததால், இடைப்பட்ட காலங்களில் தலைமைச் செயலாளர்களாக இருந்த அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பணியின் போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக கால நிர்ணயம் செய்வது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் எனவும், கருணை அடிப்படையில் வேலை கோருவோரின் மாநில அளவிலான பட்டியலை தயாரிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதா? என்றும் மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய மற்றொரு வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 2023ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, 2023ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்த குழுவும் அமைக்கப்படவில்லை. அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி, தலைமைச் செயலாளரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், மாநில நிர்வாகத்தின் தலைமை பதவியை வகிக்கும் தலைமைச் செயலாளரே, நீதிமன்ற உத்தரவுகளை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதை அமல்படுத்தவில்லை என்றால் அவருக்கு கீழ் பணியாற்றும் பிற அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துவார்கள் என எதிர்பார்க்க முடியாது? எனத் தெரிவித்த நீதிபதி, அதிகாரிகளின் மெத்தனப்போக்குக்கு இந்த வழக்கு மிகச் சிறந்த உதாரணமாக உள்ளது. எனவே, நீதி வேண்டி நீதிமன்றத்தை நாடும் பொதுமக்களைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது என கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பின் இதுவரை தமிழகத்தில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து, இது சம்பந்தமாக ஜூன் 20ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப, நீதித்துறை பதிவாளருக்கு நீதிபதி பட்டு தேவானந்த் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.