சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பான வழக்கில் அப்பகுதிகளில் போதைப் பொருள் புழக்கம் உள்ளதாக வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை அளித்திருந்தார். இந்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணை வந்தபோது, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதாகவும், அங்குள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்றும், தெருவிளக்குகள் இல்லாததால் பெண்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த போதை பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருவதாகவும், இந்த பிரிவுகளில் 180 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த போலீசார் எண்ணிக்கை போதுமானதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டவில்லை எனவும் காவல்துறையினரின் அறிக்கை திருப்திகரமாக இல்லை எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் மாநிலம் முழுவதும் போதைப் பொருள்கள் தாராளமாக கிடைக்கக்கூடிய சூழலில், மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், தெரிவித்த நீதிபதிகள் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவில் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
மேலும், போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அளவுக்கு போலீசாரை நியமிப்பது குறித்து உள்துறை செயலாளரும் டிஜிபியும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: கிண்டி ரேஸ் கோர்ஸ் விவகாரம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்!