மதுரை: தேனி மாவட்ட நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்க பொருளாளர் ஸ்ரீசரண்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
ஸ்ரீசரண்குமார் தாக்கல் செய்த மனுவில், ''6 ஆயிரம் கோடி ரூபாய் நியோமேக்ஸ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சிங்காரவேலன், தொட்டுசிக்கு பத்மநாபன், ராஜா மற்றும் செல்வகுமார் ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். அவர்கள் நிபந்தனைகளை மீறி வருவதால் அவர்களுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.'' என ஸ்ரீசரண்குமார் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ''இந்த வழக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அது, இன்னும் விசாரணையில் உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தவிர்த்தனர், தடுத்தனர் என்று எந்தவொரு தகவலையும் மனுதாரர் இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தவிர்க்கும்போதோ அல்லது சொத்துக்களை அடையாளம் காண புலனாய்வு அமைப்புடன் ஒத்துழைக்காதபோதோ, அச்சுறுத்தும் போதோ, மனுதாரர்கள் ஜாமீனை ரத்து செய்வதற்கான மனுவை தாக்கல் செய்யலாம்.
விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட பொருட்களை பொறுத்து புலனாய்வு அமைப்பு பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை இறுதி செய்யும். மனுதாரர் தன்னிடம் உள்ள ஆவணங்களை புலனாய்வு அமைப்பின் முன் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அதன் உண்மைத்தன்மையைப் பொறுத்து புலனாய்வு அமைப்பு தனது மனு மீது முடிவெடுக்கும். FIR பதிவு செய்வது மட்டும் போதுமானது அல்ல என்பதை புலனாய்வு அமைப்பு நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: சர்க்கஸ் ஒட்டகத்தை சத்தமில்லாமல் திருடி சென்ற மர்ம நபர்... தஞ்சையில் வினோத சம்பவம்!
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தை திரும்ப பெறுவதை உறுதி செய்வதே TNPID சட்டத்தின் நோக்கம். ஆனால் பொருளாதார குற்றப்பிரிவால் வழங்கப்பட்ட தரவு பாதிக்கப்பட்டவர்களுக்கு 10% தொகை கூட வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பணத்தை திரும்ப பெறுவதை உறுதி செய்ய அரசாங்கத்திற்கு தார்மீக பொறுப்பு உள்ளது." என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.