சென்னை: மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றது.
இந்த கூட்டணிக்கு மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 230 இடங்கள் கிடைத்த நிலையில் பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ், துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் மகாராஷ்டிரா நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் சிவசேனாவை உடைத்து பாஜக கூட்டணியில் இணைந்து ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக ஆனதை விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ஏக்நாத் ஷிண்டேவின் கட்சி தொண்டர்கள் யூடியூப் சேனலின் ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர்.
சிவசேனா கட்சியினர் யூடியூப் சேனலின் ஸ்டூடியோவை அடித்து நொறுக்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, குணால் கம்ரா மீது ஒரு வழக்கு மற்றும் அவர் வீடியோ பதிவு செய்த ஸ்டூடியோவை சேதப்படுத்தியதற்காக சிவசேனா தொண்டர்கள் மீது 2 வழக்குகளை மும்பை காவல்துறை பதிவு செய்தது.
இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நகைச்சுவை நடிகர் குணால் கர்மா முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தற்போது விழுப்புரத்தில் வசித்து வருவதாகவும், மும்பை சென்றால் தன்னை காவல்துறை கைது செய்வார்கள் என்றும், சிவசேனா தொண்டர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும், எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ''2 ஆண்டுகளுக்கு பிறகு கேள்விக்கு பதில்'' - குறிஞ்சி மலரை ஒப்பிட்டு செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று மார்ச் (28) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சுரேஷ், ''குணால் கம்ரா யார் பெயரையும் குறிப்பிடவில்லை. அவர் நன்கு அறியப்பட்ட நகைச்சுவை நடிகர்.
குறிப்பிட்ட நிகழ்ச்சி ஜனவரி மாதம் நடந்தது. ஆனால் வீடியோ யூடியூப் சேனலில் சமீபத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவரது நையாண்டி பேச்சு, பேச்சு சுதந்திரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதற்காக ஆளுங்கட்சி அமைச்சர்களால் மிரட்டப்படுகிறார்.'' என குறிப்பிட்டார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
மனுவை விசாரித்த நீதிபதி, குணால் கம்ராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். மேலும், இந்த வழக்கு குறித்து மகாராஷ்டிரா கார்க் போலீஸ் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.