சென்னை: சீமான் பேசிய பேச்சுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால் 100 வழக்காவது போட்டிருக்க வேண்டும் என கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 20 ஆண்டுகளாக அவரது பேச்சை கேட்கவில்லையா? என்றும் சீமானின் பேச்சை கேட்ட பின்பு உத்தரவு பிறப்பிப்பதாகவும் கூறியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சித்தும் ஆபாச வார்த்தைகளால் பேசியதாகக் கூறி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் அளித்திருந்தார்.
அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை தள்ளுபடி செய்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், சீமான் பேசிய பேச்சுக்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதாக இருந்தால், நூறு வழக்குகளாவது தொடர்ந்திருக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக அவரது பேச்சை கேட்கவில்லையா? இப்போது தான் முதன்முறையாக கேட்கிறீர்களா? எனவும் மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த வழக்கறிஞர் ஏற்கனவே நான்கு வழக்குகள் தொடரப்பட்டு அவை எண்ணிடப்படவில்லை என்று தெரிவித்தார். பின்னர் பென்டிரைவில் உள்ள அவரது பேச்சை கேட்ட பின்பு உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதி, வழக்கை ஜூன் மாதம் தள்ளி வைத்தார்.
இதையும் படிங்க: கோர்த்துவிட்ட 'சாட்டை'... கழற்றி விட்ட சீமான்; பரபரப்பை கிளப்பும் பின்னணி!
இதே போல திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு டிஐஜி வருண்குமார் சார்பில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்