சென்னை: போக்சோ வழக்கு குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசுப் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததுடன், ஆசிரியரின் வழக்கை தள்ளுபடி செய்தது. இடமாற்றம் உத்தரவில் தலையிட மறுத்து மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றமும் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், மாணவ, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்சோ சட்டத்தில் தண்டிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேரை பணிநீக்கம் செய்து பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல போக்சோ வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பணி இடமாற்றமும் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஈரோடு செம்புளிச்சாம் பாளையம் அரசுப் பள்ளியில் பணியாற்றிய சண்முகம் என்ற ஆசிரியரை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்துர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: போலி வாக்குறுதிகளை தரும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கு!
இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கில் தன்னை விடுதலை செய்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டி தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இடமாற்றம் உத்தரவில் தலையிட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஆசிரியர் சண்முகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுக்கு உள்ளானதால் இடமாற்றம் உத்தரவில் தனி நீதிபதி தலையிடவில்லை. அதனால், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.