மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கியது. மாநாடு தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற நிலையில், இன்றுடன் (ஏப்ரல் 6) நிறைவடைந்தது. இதற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு கடந்த 1953 ஆம் ஆண்டு மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் மதுரையில் நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் அகில இந்திய அளவில் கட்சியின் பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், கட்சியின் மூத்த தலைவர்கள் பிரகாஷ் காரத், பிருந்தா காரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தொடக்கமாக மேள தாள வாத்தியங்கள் முழங்க கட்சி கொடி ஏற்றப்பட்டது.
இதையடுத்து வரலாற்று கண்காட்சி, புத்தக கண்காட்சி, கலை இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கட்சியின் தியாகிகளை கவுரவிக்கும் விதமாக நினைவு சுடர் ஏற்றப்பட்டது. வெண்மணி தியாகிகள் நினைவு செங்கொடியை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வழங்கினார். கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஏ.கே.பத்மநாபன் கொடியை பெற்றுக்கொள்ள மூத்த தலைவர் பிமன் பாசு அதனை ஏற்றி வைத்தார். பின்னர் பிரதிநிதிகள் மாநாடு, பொது மாநாடு தொடங்கியது.
இம்மாநாட்டின் ஒரு பகுதியாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி 'கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை' என்ற தலைப்பில் நடந்த மாநில உரிமைக்கான பாதுகாப்பு கருத்தரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா உயர் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டின் கடைசி நாளான இன்று கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், பொலிட்பீரோ உறுப்பினர்கள் மற்றும் புதிய பொதுச் செயலாளர் உள்பட நிர்வாகிகளுக்கான தேர்வு நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநாடு நிறைவடைய இருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் இந்த பதவிக்கு பேபியின் பெயரை பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததுபோல, இஸ்லாமியர்கள் சுதந்திரம் நள்ளிரவில் பறிப்பு" - அமைச்சர் ரகுபதி
தலைமைக் குழு உறுப்பினர்கள்: மேலும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாக தமிழ்நாட்டில் இருந்து கே.பாலகிருஷ்ணன், வாசுகி தேர்வு செய்யப்பட்டனர். மத்தியக் குழு உறுப்பினர்களாக சண்முகம், பி. சம்பத், குணசேகரன், பால பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்களாக 85 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 31 பேர் புதிய முகங்கள் ஆவார்கள்.
இதிில் பிரகாஷ் காரத், பிருந்தா காரத், மாணிக் சர்க்கார், சுபாஷினி அலி, ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மத்தியக் குழு மற்றும் அரசியல் தலைமைக் குழுவுக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டின் நிறைவாக மாலையில் பாண்டி கோயில் ரிங்ரோட்டில் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணி முடிவில் ரிங் ரோட்டில் மஸ்தான்பட்டி அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.