நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி துவக்க விழா இன்று நடைபெற்றது. மலர் கண்காட்சியை துவக்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து பூங்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு மலர் அலங்காரங்களையும் பார்வையிட்டார்.
பின்னர் இத்தாலியன் பூங்காவில் நடக்கும் பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி, திபெத் மக்களின் நடன நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இந்த விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மலர் கண்காட்சி இன்று தொடங்கி வரும் மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த 127வது மலர் கண்காட்சியில் இரண்டு லட்சம் கொய் மலர்கள், ரோஜா மலர்களை கொண்டு தாவரவியல் பூங்காவில் பொன்னியின் செல்வன் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், படகு மற்றும் தர்பார் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர கொய் மலர்கள் மற்றும் ரோஜாக்களை கொண்டு கல்லணை சதுரங்கம், பழங்கால இசைக்கருவிகள், புலி உள்ளிட்ட உருவங்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மலர் கண்காட்சியை காண வந்த தென்காசியை சேர்ந்த சுற்றுலா பயணி நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசுகையில், ”நாங்கள் தென்காசியிலிருந்து வருகிறோம். அங்கு மிகவும் வெட்பமாக உள்ளது. நாங்கள் ஊட்டிக்கு விடுமுறைக்காக வந்துள்ளோம். இங்கு காலநிலை மிகவும் நன்றாக உள்ளது. மேலும் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியுள்ளது. குடும்பத்தினருடன் சுற்றிப் பார்க்க இது ஒரு நல்ல இடமாகும்” என கூறினார்.
இதையும் படிங்க: அண்ணன் மகளுக்கும் சிம்மாசனத்தில் இடமளித்த மு.க.ஸ்டாலின்! உதகை மலர் கண்காட்சியில் ருசிகரம்!
அதேபோல் சென்னை முகப்பேர் பகுதியில் இருந்து மலர் கண்காட்சியை காண வந்திருந்த சுற்றுலா பயணி ஷாலினி பேசுகையில், "இங்கு 127வது மலர் கண்காட்சி நடைபெறுகிறது. பொன்னியின் செல்வன் கோட்டை போன்ற மாடல்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது மிகவும் அழகாக உள்ளது. மேலும் பல்வேறு வடிவங்களில் காட்சியளிக்கும் மலர் கண்காட்சி ரசிக்கும் படியாக உள்ளது." என கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.