- By ஆர்.மணிகண்டன்
தென்காசி: தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ’அடிக்கிற வெயிலுக்கு சில்லுனு ஒரு சர்பத்’ அருந்தி தாகத்தைத் தணித்துக் கொள்ளுவதற்கு யாருக்கு தான் பிடிக்காது. அந்த சர்பத்தின் ருசியை கூட்டும் முக்கியப் பொருட்களில் ஒன்று எலுமிச்சை பழம். சர்பத்தில் இருந்து சமையலறை வரையிலும், கிருமிநாசினியிலிருந்து பூஜை வரை என அனைத்து நிகழ்வுகளிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது எலுமிச்சை.
இது போன்று பல்வேறு சிறப்புகளைப் பெற்ற எலுமிச்சை பழம் தமிழ்நாட்டில் அதிக அளவில் விளையும் பகுதியாக தென்காசி மாவட்டம் புளியங்குடி உள்ளது. இதன் தனித்துவத்தைப் போற்றி மத்திய அரசு புவிசார் குறியீடு கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட "லெமன் சிட்டி" புளியங்குடி எலுமிச்சை பழத்தின் விசேஷம் என்னவென்று பலருக்கும் கேள்வி எழலாம்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டம் தென்காசி. ரம்மியமான இயற்கை சூழலுக்கு இடையே அமைந்துள்ள ஊர் புளியங்குடி. ராஜபாளையத்தில் இருந்கு கேரளா செல்லும் வழியில் அமைந்துள்ள புளியங்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரதான தொழிலே எலுமிச்சை விவசாயம் தான். காரணம் ஆண்டுதோறும் இந்த பகுதியில் நிலவும் சீதோஷண நிலை. இந்த பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவில் 1500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் எலுமிச்சை விவசாயம் செய்து வருகின்றனர்.

இங்கு விளையும் எலுமிச்சை பழங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வரும் நீர், காற்று மற்றும் மண் வளம் காரணமாக இயற்கையாகவே அதிக சிட்ரிக் அமிலம் தன்மை கொண்டதாக இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இது மட்டுமின்றி இந்த எலுமிச்சை பழங்கள் அதிக அளவு சாறு தருபவையாகவும் உள்ளன. வாசனையில் அனைவரையும் ஈர்க்கும் இந்த எலுமிச்சை பழங்களின் தன்மை மற்றும் விவசாயிகளின் தேவை குறித்து அறிந்து கொள்ள லெமன் சிட்டியை நோக்கி நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு குழு சென்றது.
புளியங்குடி ஊருக்குள் நுழைந்த உடனே எலுமிச்சை வாசனை மூக்கை துளைத்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் காற்றில் கலந்து வரும் எலுமிச்சை வாசனையை நுகர்ந்தபடி ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்றோம். அங்கு ஏக்கர் கணக்கில் விவசாயிகள் எலுமிச்சை மரங்களை நட்டுப் பராமரித்து வருவதைப் பார்க்க முடிந்தது. எழில் கொஞ்சும் அழகின் துவக்கப் புள்ளியாக அடர் பச்சை நிறத்தில் மரங்கள் காட்சி தந்தன. அதில் இருந்த பழங்கள் பழுப்பதற்கு முன்பு மரத்தின் நிறத்தைப் போன்று அடர் பச்சையாகவும், சில பழங்கள் பழுத்து அழகிய மஞ்சள் நிறத்திலும் தொங்கும் காட்சிகளைக் காண முடிந்தது.
இந்த மஞ்சள் நிற பழுத்த பழங்களை மரத்தில் விட்டு வைப்பதில்லை. ஏனென்றால் பழுத்து விட்டால் பழங்கள் தானாகவே கீழே விழுந்து விடுவதால் அதற்கு முன்பாகவே அதைப் பறித்து விடுகின்றனர் விவசாயிகள். அப்போது, பெண் தொழிலாளர்கள் மரங்களில் இருந்து பழுத்த பழங்களைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மறுபுறம் அதனை விவசாயிகள் ஊரின் மையப் பகுதியில் உள்ள சந்தைக்கு எடுத்துச் செல்லும் பணியில் மும்மரமாக ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேலையின் நடுவே நமக்குப் பேட்டியளித்த விவசாயி அப்துல் காதர், “புளியங்குடி எலுமிச்சை பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், எங்கள் பகுதியில் எலுமிச்சை பழம் சார்ந்த எந்த ஒரு தொழிற்சாலையும் இல்லை. தொழிற்சாலை இருந்தால் எங்களுக்கு உரிய விலை கிடைக்கும். தற்போது வியாபாரிகளிடம் நாங்கள் பழங்களை விற்பனை செய்கிறோம். அவர்கள் எங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் பார்க்கிறார்கள்.
வியாபாரிகள் எங்களிடம் கிலோ ரூ.20 ரூபாய் வாங்கி, பல மடங்கு லாபத்தில் விற்கிறார்கள். இதில் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். அரசு எங்கள் பகுதியில் ஒரு தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும். அதேபோல் விலை குறைவாக உள்ள சமயங்களில் பழங்களைப் பதப்படுத்தி வைப்பதற்குக் குளிர்பதன கிடங்கு வேண்டும் என பல ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். ஒரு எலுமிச்சை மரம் காய்ப்பதற்கு அதிகபட்சம் 7 ஆண்டுகளாகும். அதுவரை மரங்களைப் பராமரிப்பதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. குறிப்பாக வன விலங்குகள் பிரச்னைகள் உள்ளன. எங்கள் பகுதியிலிருந்து வனத் துறை அலுவலகத்தையும் வேறு பகுதிக்கு மாற்றி விட்டனர். இதனால், எலுமிச்சை மரங்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை எங்களால் தடுக்க முடியவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
நம்மிடம் பேசிக் கொண்டே விவசாயி அப்துல் காதர், மூட்டை மூட்டையாக கட்டிய எலுமிச்சை பழங்களை இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, காலை 11 மணி வரை தான் சந்தை திறந்திருக்கும் என்று அவசர அவசரமாக கிளம்பிச் சென்றார்.
இதையடுத்து நாமும் அவருடன் சந்தைக்குச் சென்றோம். அங்கு ஏஜெண்டுகள் விவசாயிகளிடம் பழங்களை வாங்கி, வியாபாரிகளுக்கு ஏலம் விடத் தொடங்கினர். மேலும் அந்த ஏலத்தில் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா வியாபாரிகள் அதிகளவு பழங்களை கொள்முதல் செய்ததை காண முடிந்தது. குறிப்பாகத் தமிழ்நாட்டைக் காட்டிலும் கேரள மாநிலத்தில் புளியங்குடி எலுமிச்சைக்கு அதிக வரவேற்பு இருப்பதை நேரில் பார்க்க முடிந்தது.
விற்பனை தொடர்பாக வியாபாரி முகமது இப்ராஹிமிடம் கேட்டோம். அவர், “நாள் ஒன்றுக்கு இங்கிருந்து 250 டன் எலுமிச்சை பழங்களை விற்பனை செய்கிறோம். இந்த ஆண்டு விளைச்சல் அதிகம் இருக்கிறது. ஆனால், தேவை குறைவாகவே உள்ளது. இதற்கு முன்னர் வெளிநாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்தோம். ஆனால், இப்போது அப்படி இல்லை. கேரளாவைச் சார்ந்தே வியாபாரம் நடந்து வருகிறது. பச்சை நிற காய்களைத் தான் வியாபாரிகள் பெரிதும் விரும்புகின்றனர்” என்றார்.
இது குறித்து பேசிய மற்றொரு வியாபாரி சீனிச்சாமி, “வியட்நாம் நாட்டில் அரசே, எலுமிச்சை பழங்களுக்கு குளிர்பதன வசதி செய்து கொடுத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் அதிக அளவு எலுமிச்சையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். முன்னர், இங்கிருந்து மாலத்தீவுக்கு ஒரு நாளைக்கு 10 டன் வரை எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதே போல் துபாய்க்கும் நாள்தோறும் 24 டன் ஏற்றுமதி செய்தோம். ஆனால், கொரோனா பாதிப்புக்குப் பிறகு இந்த 2 நாடுகளுக்கும் ஏற்றுமதி முற்றிலும் நின்று விட்டது.
இந்த பகுதிக்கு போதிய ரயில் போக்குவரத்து இல்லாததால் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் இருக்கிறோம். மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் இங்கிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்குச் சென்று அங்கிருந்து ரயிலில் கொண்டு செல்ல வேண்டும். எனவே அருகில் உள்ள தென்காசி மற்றும் செங்கோட்டையில் இருந்து கூடுதல் ரயில் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.
புவிசார் குறியீடு மூலம் தங்களின் எலுமிச்சை பழங்களுக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் சந்தைப்படுத்துதலை எளிமைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்