நீலகிரி: நீலகிாி மாவட்டத்தில் கோடை சீசன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்து வருகின்றனர். தமிழ் புத்தாண்டு மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா போன்ற சுற்றுலாத்தளங்களில் குவிந்து வருகின்றனர்.
அவர்களை மகிழ்விக்கும் விதமாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா போன்ற இடங்களில் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் செடி ரகங்கள் வைக்கபட்டுள்ளன. அதேபோல் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாகக் கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, ஹோலிஹாக், டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட், வில்லியம் உட்பட பல்வேறு வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு தற்போது பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
ஊட்டியில் கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . இதனால் பெரும்பாலான தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜ்கள் மே மாதம் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, ரோஜா பூங்கா சாலைபோன்ற பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிம்லாவுக்கு அடுத்து ஊட்டிக்கு தான் இந்தப் பெருமை; 8 லட்சம் மக்களின் கனவு நனவானது!
பொதுமக்கள் நீண்ட நேரம் சாலையில் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மேட்டுப்பாளையம் -குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிகரித்து உள்ளதால் நீண்ட நேரம் மலைப்பாதையில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்