தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் சரியாக வழங்காததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், துக்காச்சி கிராமத்தில் இயங்கி வரும் நியாய விலைக்கடையில் 650க்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு, ஜீனி, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நியாய விலை கடை ஊழியர் ராஜேஷ் சரியாக கடையை திறப்பதில்லை என்றும், பெரும்பாலான நேரம் கடை பூட்டியே இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால் அரிசி பருப்பு பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒரு சிலரை தவிர ஏனைய மக்களால் பொருட்கள் வாங்க முடியாமல் அவல நிலை நீடிப்பதாகவும், மேலும் பயோ மெட்ரிக் முறையில் சரியாக ரேகை பதிவாகவில்லை என்றும் பொருட்கள் வாங்க வரும் மக்களை நீண்ட நேரம் கொளுத்தும் வெயிலில் காத்திருக்க வைப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக துக்காச்சி கிராம மக்கள் ஏராளமானோர் கும்பகோணம், பூந்தோட்டம் சாலைக்கு வந்து, இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டி, சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியார்கோயில் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: சித்திரை முதல் நாள்; விவசாயம் செழிக்க 'நல்லேர்' பூட்டி உழவு பணியை தொடங்கிய தஞ்சை விவசாயிகள்! |
அதில், விரைவில் வட்ட வழங்கல் துறையினர் மூலம் சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடை ஊழியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அந்த இடத்தில் மற்றொரு பணியாளர் நியமிக்கப்படுவார் என போலீசாரால் உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கப்பட்ட சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு மக்கள் விலகிச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.