தேனி: மின்சாரம் தாக்கி உயிரிழந்த கூலித் தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தேனி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் ஷாஜகான் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோப்பில் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பதற்காக கூலி தொழிலாளியான ஆண்டிசாமியை அழைத்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஆண்டிச்சாமி தென்னை மரத்தில் ஏறி தேங்காய் இறக்க முயன்ற போது, மரத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பி பச்சை மட்டையில் பட்டு, ஆண்டிச்சாமி தூக்கி வீசப்பட்டு, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு வந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உயிரிழந்த ஆண்டிச்சாமி உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
ஆண்டிசாமி உயிரிழந்தது குறித்து சம்பவம் நடந்த இடமான தென்னந்தோப்பின் உரிமையாளரும், தேங்காய் பறிக்கும் தொழிலை குத்தகைக்கு எடுத்த வரும் என யாரும் நேரில் வந்து விசாரிக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த கூலித் தொழிலாளி ஆண்டிச்சாமிக்கு ஒரு மனைவி, 10 வயதில் மகன் மற்றும் 8 வயதில் மகளும் உள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்க உதவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தண்ணீர் இல்லாத கிணற்றில் நாயோடு விழுந்த புலி... உயிரோடு மீட்ட வனத் துறையினர்!
பின்னர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட கானா விலக்கு பகுதி காவல் துறையினர் கூலித் தொழிலாளி குடும்பத்திற்கு உதவிட நடவடிக்கை எடுப்பதாக உறிதி அளித்தனர். இதனைத் தொடர்ந்தும் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் கூலித் தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்காவிட்டால் அடுத்த கட்டமாக தீவிர போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்