திருச்சி: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''புதிய தமிழகம் கட்சிக்கு பேரணி நடத்த அனுமதி வழங்காமல், தங்களுக்கு தேவையான அமைப்புகளுக்கு பேரணிக்காக அனுமதி வழங்கி காவல் துறை தன்னிச்சையான முறையை கையாளாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அவர் அனுமதி அளித்தால் மீண்டும் திருச்சியில் பேரணி நடத்துவோம்.
தமிழக அரசு எந்த ஒரு ஆய்வையும் மேற்கொள்ளாமல் முழுமையான தகவல்களை பெறாமல் அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள்இடஒதுக்கீட்டை வழங்கிவிட்டு எஞ்சியுள்ள 15% அருந்ததியின மக்களுக்கு முன்னுரிமை என்று அரசு அறிவித்ததால் கடந்த 15 ஆண்டுகளில் 25000 மேற்பட்ட பணியிடங்கள் அருந்ததியினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது.
திமுக பேசுவதெல்லாம் முற்போக்கு. ஆனால் செயல்பாடு எல்லாம் அயோக்கியத்தனமாக உள்ளது. ஜூன் மாதம் 17 ஆம் தேதிக்குள் தமிழக அரசு மூன்று சதவீத உள்இடஒதுக்கீட்டை ரத்து செய்வது தொடர்பாக முடிவு எடுக்காவிட்டால் 18 ஆம் தேதிக்கு பின்னர் திமுக அமைச்சர்கள் எங்கு சென்றாலும் அவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
தேசிய கல்வி கொள்கையில் திமுகவினர் என்ன குற்றம் கண்டுபிடித்தார்கள்? தேசிய கல்வி கொள்கை உலக அளவிலான கல்வித் திட்டத்திற்கு நிகராக உள்ளது. அதை முழுமையாக அமல்படுத்தினால் குழந்தைகள் மூன்று விதமான திறன் உள்ளவர்களாக வருவார்கள். மதிப்பெண் அடிப்படையிலான மாணாக்கர்களையே தற்போதைய கல்வித்திட்டம் உருவாக்கி வருகிறது.
மதயானை என்ற கூற்றில் மதத்தை புகுத்துவதாக கூறுகிறார்கள். பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் மதங்கள் குறித்தும் அந்த நாட்டு பாடத்திட்டத்தில் இடம் பெறுவது போல இஸ்லாமிய படையெடுப்புக்கு பின்னரும், பல்வேறு ஆலயங்கள் இடிக்கப்பட்ட பின்னரும் அதையும் மீறி 70% இந்துக்கள் துடிப்புடன் உள்ளனர்.
எத்தனை பேர் மதமாற்றம் செய்யப்பட்ட பிறகும், கொல்லப்பட்ட பிறகும் மக்கள் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக தேசிய கல்வி கொள்கை மதயானை என்பது திராவிட மாயை பார்வையில் மாயையாகவே உள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒன்றிய அரசாக இருந்தது. தற்போது இந்தியாவாக மாறிவிட்டது. இந்தியாவை பாதுகாக்க கனிமொழி தலைமையில் குழுவெல்லாம் செல்கிறது என்பதை பார்க்கும்போது திமுகவின் வேடங்கள் எப்படி எல்லாம் மாறுகிறது என்பது தெரிகிறது. திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
டாஸ்மாக் குடியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்போம். மது இல்லா புதிய தமிழகம் என்ற புத்தகத்தை 2023 ஆம் ஆண்டு வெளியிட்டோம் அப்போது ஒரு லட்சம் கோடி டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளோம். விழிப்புணர்வு இல்லாத மற்றும் ஏழை சமூகங்கள் எல்லாம் குடித்து பாழாகிப்போய் உள்ளது.
ஊருக்கு நான்கு, ஐந்து பேர் மதுவால் இறந்து கொண்டு வருகின்றனர். பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. டாஸ்மாக் மூலம் மிகப்பெரிய அளவில் வருவாய் ஆளுங்கட்சிக்கும், திமுக குடும்பத்தினருக்கும் குறிப்பாக திமுக முதல்வர் குடும்பத்திற்கும் பல கோடி ரூபாய் செல்கிறது.
அதன் வெளிப்பாடாகத்தான் ஆளுநருக்கு மனுவாக அளித்துள்ளோம். முதலமைச்சர் குடும்பம் உள்ளிட்ட பலர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆளுநரை வலியுறுத்தி வந்தோம். அமலாக்கத்துறை டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதில் தவறில்லை.
எல்லோரையும் எல்லா காலமும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டு மக்களையும் நீண்ட காலத்திற்கு ஏமாற்ற முடியாது. மத்திய அரசு டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை மட்டும் போதாது. மத்திய அரசு தனி கமிஷன் உருவாக்கி 3 மாத காலத்திற்குள் ஆய்வு செய்து, ஊழலில் பங்கேற்ற அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆளும் கட்சியோ? ஆண்ட கட்சியோ? யார் மீது விசாரணை நடத்தினாலும் தவறில்லை. அமலாக்கத்துறை திமுக மட்டுமல்ல. தொழில் அதிபர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தியுள்ளது. திமுகவின் நான்காண்டு ஆட்சி, ஐந்தாவது ஆண்டில் தொடரக்கூடாது என்பது தான் எங்களது விருப்பம். எந்த காரணத்தை கொண்டும் 2026க்கு பின்னர் அது தொடராது.
தமிழகத்தில் புற்றுநோய் அதிகரிப்பதற்கு டாஸ்மாக்கும் ஒரு காரணம். மது இல்லாத தமிழகம் உருவாக வேண்டும். குளிர் பிரதேச நாடுகளில் மது அருந்தி பலர் உயிரிழப்பதால் என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார்கள். அதனால் தமிழ்நாடு மற்றும் இந்திய சீதோஷ்ண நிலைக்கு மது அவசியம் இல்லை. இலக்கியத்தை போற்றுகிறார்கள். திருக்குறளை போற்றுகிறார்கள். ஆனால் கள் உண்ணாமையை விட்டு விடுகிறார்கள்.
இதையும் படிங்க: அதிமுக பேரூராட்சி தலைவர் தகுதி நீக்கம்: முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆவேசம்!
ராமதாஸ் படுத்துக்கொண்டு 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று கூறியதாக கேட்கிறீர்கள். படுத்துகிட்டு, நின்றுகிட்டு ஜெயிச்சாலும் சரி வாழ்த்துகள். வெற்றி பெற வாழ்த்துகள். திமுகவை எந்த காலத்திலும் மீண்டும் தொடர அனுமதிக்க கூடாது. அதுதான் எங்கள் நிலைப்பாடு. வலுவான கூட்டணி தமிழகத்தில் அமைய வேண்டும்.
அதற்கு உண்டான எல்லாம் முயற்சியையும் புதிய தமிழகம் எடுக்கும். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழலும் சட்ட ரீதியாக வந்து விடும். மன்னர் பரம்பரை என்பது எழுதப்படாத விதியாக மாறிவிடும். நாட்டின் நலனை கருதும் அனைவரும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய வேலை செய்ய வேண்டும்.
தனித்தனியாக இருந்து திமுகவை எதிர்க்க முடியாத பட்சத்தில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த முறை எல்லாரும் ஒன்றிணைய வேண்டும்.
எதிரி பலம் தன்பலம் அறிந்து போர் தொடுக்க வேண்டும். எல்லாருமே முதல்வராக ஆசைப்படுவது என்பது வேறு. கள நிலவரம் என்பது வேறு. திமுக பொது எதிரி. அதனை தோற்கடிப்பதற்கு எல்லாருமே ஒன்றிணைய வேண்டும்." என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.