கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில் தனியார் கம்பெனி கழிவுகள் கொட்டப்பட்டதால் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
கோயம்புத்தூரின் கிணத்துக்கடவு அருகே கக்கடவு காணியம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. அங்கு விவசாய நிலங்கள் அதிகளவில் இருக்கின்றன. அதில் பாலு என்பவருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலமும் உள்ளது. இவர் கடந்த ஒரு மாத காலமாக அவரது தோட்டத்தில் தனியார் கம்பெனி கழிவுகள், மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகளைக் கொட்டி மூடி வருகிறார். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, ஈ தொல்லையும் அதிக அளவில் காணப்படுகிறது.
எனவே அப்பகுதியில் தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இது போக, பாலு தனது இடத்திலேயே ஆழமாக பெரிய குழியைத் தோண்டி அதில் கொட்டி, அவற்றை தீ வைத்து எரித்தும், அந்த தீயை தனது நிலத்திற்கு அருகில் ஓடுகிற பிஏபி வாய்க்காலில் இருந்து தண்ணீர் எடுத்து ஊற்றி அணைத்தும் இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் நெகமம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்ததனர். புகாரைப் பெற்றுக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் தோட்டத்து உரிமையாளர் பாலு மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
பாலுவின் இந்த செயல் குறித்து அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், தங்களது பகுதியில் நிறைய தனியார் விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்கள் இருக்கின்றன. அந்த பகுதியில் தற்போது மழை பெய்துள்ளதால் அதிக அளவில் துர்நாற்றம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சாலையைக் கூட கடந்து செல்ல முடியவில்லை. அதிகப்படியான கழிவுகளால் ஈக்களும் அதிகளவில் மொய்க்கின்றன என்று கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் வருவாய்த் துறையினர் பாலு மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமன்றி, மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். தனது சொந்த தோட்டமாக இருந்தாலும் ஒரு தனி நபரின் இந்த செயலால் ஒட்டுமொத்த கிராமமும் தற்போது சங்கடத்திற்கு ஆளாகியிருப்பது வருத்தமளிக்கிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்