கள்ளக்குறிச்சி: கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. தொடர்ந்து பந்தலடி தெய்வநாயகம் செட்டியார்தோப்பில் பாரதம் நிகழ்ச்சி ஆரம்பமானது.
இதைத் தொடர்ந்து சந்தனுசரிதம், பீஷ்மர் பிறப்பு, தர்மர், பாஞ்சாலி பிறப்பு, பகாசூரன்வதம், பாஞ்சாலி திருமணம், கூத்தாண்டவர் பிறப்பு, ராஜாசூய யாகம், தெய்வநாயகம் செட்டியார்தோப்பில் வெள்ளிக்கால் நடுதல், கிருஷ்ணன் தூது ஆகிய நிகழ்வுகளும், இரவில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மே 11ஆம் தேதி கூத்தாண்டவர் சுவாமிக்கு பாலாலயமும், மே 12ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தலும் நடைபெற்றன. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று (மே 13) மாலை கூவாகம் கூத்தாண்டவர் சன்னதி முன்பு கோயில் பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பெரிய அளவிலான சூடங்களை ஏற்றி திருநங்கைகளும், பொதுமக்களும் வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து திருநங்கைகள் கும்மியடித்து, ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

பின்னர் இன்று காலை கோயிலில் உள்ள அரவான் சிரசுவுக்கு முதல் மாலை அணிவிக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அரவான் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது திருநங்கைகள் சுற்றி நின்று கும்மியடித்தனர். தொடர்ந்து சூரைத் தேங்காய்களை திருநங்கைகள் உடைத்து வழிபாடு செய்தனர். அப்போது சுவாமி அரவானுக்கும், கோயிலுக்கு அருகிலுள்ள ஆஞ்சநேய சுவாமிக்கும் மிகப்பெரிய அளவிலான மாலை அணிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 8.35 மணிக்கு மேல் தேரோட்டம் தொடங்கியது. இத்தேரோட்டத்தில் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், கூவாகம், தொட்டி, கீரிமேடு, நத்தம் என சுற்றுப்புறக் கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், திருநங்கைகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இதையும் படிங்க: ''காவல்துறை கெடுபிடி இல்லாமல் இருந்தால் பிழைக்கலாம்'' - காத்திருக்கும் கூவாகம் வியாபாரிகள்!
தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள் வேண்டுதலின் பேரில், தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவான் மீது வீசியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு செய்தனர். இந்நிகழ்வில் திருநங்கைகள் கற்பூரத்தை ஏற்றி வழிபட்டனர். அக்கற்பூரத்தை பொதுமக்கள் கையில் எடுக்க முயன்றதால் திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.