கிட்னி திருட்டு விவகாரத்தில் வெளியானது விசாரணை அறிக்கை - முறைகேட்டை தடுக்க அரசுக்கு குழு அளித்துள்ள பரிந்துரைகள் என்னென்ன?
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் நிகழ்ந்த முறைகேடு குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு தமிழக அரசு அளித்துள்ள அறிக்கையில், இந்த முறைகேட்டை தடுக்க பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

Published : August 10, 2025 at 8:51 PM IST
சென்னை: கிட்னி திருட்டு விவகாரத்தின் எதிரொலியாக, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக ஏற்கெனவே செயல்பட்டு வரும் மாவட்ட அங்கீகார குழுவை மறுசீரமைப்பு செய்து, மாநில அளவிலான குழு அமைத்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது.
தொடர்ந்து, முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் வினீத் தலைமையிலான குழு விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் பேரில், வினீத் தலைமையிலான அதிகாரிகள் குழு கடந்த ஜூலை 22 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டது. இந்த குழுவில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் மாரிமுத்து, துறை இணை இயக்குநர் மீனாட்சி சுந்தரி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி சிதார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மீதான புகார்களின் அடிப்படையில், திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து சிறுநீரக கொடையாளிகள் தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டன
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அனுமதி ரத்து?
இதில், மனித உறுப்பு மாற்றுச் சட்டம், 1994-க்கு முரணாக சான்றுகள் பெறப்பட்டன. மேலும், தனியார் மருத்துவமனைகள் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்தும், பணத்திற்காக தரகர்கள் மூலம் உறுப்புகளை பெற்று மனித உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளன என்பதும் தெரிய வந்தது. மேலும், தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த Transplant Coordinator மூலம் சில ஆவணங்கள் முறைகேடாக தயார் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனால், இந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கும், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநில அதிகார நியமன அலுவலர் (State Appropriate Authority), மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர், முறைகேடாக அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்ட குறிப்பிட்ட 2 தனியார் மருத்துவமனைகள் மீது முழுமையான விசாரணை செய்திட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, ஆனந்தன் மற்றும் ஸ்டான்லி மோகன் என்ற இரண்டு தரகர்கள் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது தெரிய வந்தது. எனவே, BNS 2023 சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்க, அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளையும் இந்தக் குழு அளித்துள்ளது.
- உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை குறித்து மாவட்ட அளவிலான அங்கீகாரம் வழங்கும் குழுக்களின் பணி நடைமுறைகளை மேலும் சீராக்க, நிலையான இயக்க நடைமுறைகளை மருத்துவக் கல்வி இயக்குநர் (Standard Operating Procedures) உருவாக்கி செயல்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இனிவரும் காலங்களில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வழங்கும் மாவட்டக் குழுவிற்கு விண்ணப்பிக்கும் அனைத்து இனங்களிலும் கட்டாயமாக நேர்காணல்களை வீடியோ பதிவு செய்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- முறையாக பரிசீலனை செய்து ஆவணங்களை மாவட்டக் குழுவிற்கு சமர்ப்பிக்காமல், அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் வழங்கிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
| இதையும் படிங்க: தமிழ்நாட்டை உலுக்கும் 'கிட்னி திருட்டு': 2 தனியார் மருத்துவமனைகளுக்கு பறந்த 'நோட்டீஸ்' |
குழு மறுசீரமைப்பு:
- கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்ககம், மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய நான்கு இடங்களிலும் மனித உறுப்பு மாற்று அங்கீகார மாவட்டக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
- ஏற்கனவே செயல்பட்டு வருகிற மாவட்ட அங்கீகார குழுவினை மறுசீரமைப்பு செய்து, மாநில அளவிலான ஒரு குழு மற்றும் மாநில அளவில் நான்கு மாவட்டக் குழுக்கள் என மறுசீரமைப்பு செய்து அமைத்திட பரிந்துரைக்கப்படுகிறது.
- மனித உறுப்பு மாற்று சட்டத்தில் சிறப்பம்சங்கள் குறித்தும், சட்ட நுணுக்கங்கள் குறித்தும் மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் தெளிவுரை வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- அறுவை சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மருத்துவ-சட்டரீதியானவை (Medico Legal) என்பதால் பத்தாண்டு வரை ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக வருவாய் துறை, காவல் துறை மற்றும் மருத்துவத் துறை அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும்.
- இதுகுறித்த அனைத்து படிவங்களும் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளின் வடிவிலும் வழங்கிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மனித உறுப்பு மாற்று விண்ணப்பங்கள் அடிக்கடி பெறப்படும் பட்சத்தில், அனுமதி வழங்கும் அங்கீகாரக் குழு, தனிக்கவனம் செலுத்தி மனுக்களை பரிசீலனை செய்து தக்க முடிவு எடுக்க வேண்டும்.
- தொடர் முறைகேடான சான்றுகள் அங்கீகாரக் குழுவில் சமர்ப்பித்து அனுமதி பெறுவது கண்டுபிடிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மீது கடுமையான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அறிவிப்பு பதாகை:
- மனித உடல் உறுப்பு ஏற்பாளர், உடல்நிலை காரணமாக நேரடியாக அங்கீகார குழுவிற்கு முன்பாக ஆஜராக முடியாத பட்சத்தில், காணொளி மூலமாக கட்டாயம் கலந்தாய்வு செய்யப்பட வேண்டும்.
- மனித உறுப்பு மாற்று அனுமதிச் சான்று பெற்றுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், உடல் உறுப்பு தானம் பணத்திற்காகவோ, அல்லது வேறு தவறான நோக்கத்திற்காகவோ வழங்கப்படக்கூடாது என்ற பதாகையை கண்டிப்பாக வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
- இதுகுறித்து புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலரின் விவரம், முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் பதாகைகளில் குறிப்பிடப்பட வேண்டும்.
- மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் தலைமையின் கீழ், வருடத்தில் இரு முறை மனித உறுப்பு மாற்று அங்கீகாரக் குழுவின் மூலம் நிராகரிக்கப்பட்ட அனைத்து விவரங்களை தணிக்கை செய்யவும், ஆய்வு அறிக்கை தயார் செய்து ஆண்டறிக்கையாக அரசிற்கு சமர்ப்பிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பயிலரங்கம்:
மனித மாற்று அறுவை சிகிச்சை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு பயிலரங்கம், மாநிலத்தில் அங்கீகரிக்கப்பட்ட 4 மண்டலங்களில் செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

