- By இரா. சிவக்குமார்
மதுரை: அழியும் நிலையில் உள்ள தமிழர் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான மரக்கால் ஆட்டம் எனப்படும் கட்டைக்கால் ஆட்டத்தை மீட்கும் முயற்சியில் தமிழகத்தைச் சேர்ந்த கேரள மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜமாணிக்கம் ஈடுபட்டுள்ளதுடன், தனது சொந்த ஊரில் கோடைகால பயிற்சி முகாம் வாயிலாக தட்டச்சு, ஓவியம், கையெழுத்து, ஒயிலாட்டம், கரகம் உள்ளிட்ட 14 வகையான பயிற்சிகளை வழங்கி கிராமப்புற மாணவ, மாணவிகளை ஊக்குவித்து வருகிறார். அது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு..
தமிழ்நாடு என்பது வெறும் மாநிலம் மட்டுமல்ல, பண்பாடு, கலை, இலக்கியம் உள்ளிட்ட பாரம்பரியங்களுக்கு பெயர் பெற்றது. நம் முன்னோர்கள் வாழ்க்கையே கலைகளுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டின் தொன்மையை கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடந்து வரும் அகழாய்வுகள் உலகத்திற்கு அறிவித்து வருகின்றன.
ஆனால், வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நமது பாரம்பரிய கலைகளை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. குழந்தைகள் தொலைக்காட்சி, செல்போன் போன்றவற்றின் பக்கம் திரும்பியதால், ஓடி விளையாடி பாப்பா என்ற ஒன்றே இல்லாமல் போய் விட்டது. இதனால், பாரம்பரிய கலைகளை கற்றுக் கொள்ளும் ஆர்வமும் இன்றைய தலைமுறையிடம் மறைந்து வருகிறது. ஒரு கலையின் அழிவு என்பது ஒரு இனத்தின் அடையாளம் மற்றும் வரலாற்றின் ஒரு பகுதியே அழிவதற்கு நிகர் என்று கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் அழிந்து வரும் மரக்கால் ஆட்டம் உள்ளிட்ட கலைகளுக்கு உயிர் கொடுக்க தொடர்ந்து போராடி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், கேரளாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவருமான ராஜமாணிக்கம்.

யார் இந்த ராஜமாணிக்கம் ஐஏஎஸ்?
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியராகப் பணி புரிந்து அங்குள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பது, புனரமைப்பது என ஆக்கப்பூர்வ திட்டங்களால் அந்த மாநில மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர், மதுரை மாவட்டம் திருவாதவூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் ஐஏஎஸ். 'என்டே குளம் எர்ணாகுளம்', 'அன்போடு கொச்சி' போன்ற பல்வேறு திட்டங்களால் கேரள அரசின் பாராட்டைப் பெற்றவர்.

தற்போது கேரள மாநில வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூர் தான் ராஜமாணிக்கத்தின் பூர்வீகம்.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் போது, திருவாதவூரில் இலவச கோடைகால பயிற்சி முகாம் மூலம், தட்டச்சு, கையெழுத்து, ஓவியம், தையல், எம்பிராய்டரி போன்ற பயிற்சிகளையும், பரதம், கரகம், பறை, ஒயிலாட்டம், கோலாட்டம், மரக்கால் ஆட்டம் போன்ற பயிற்சிகளை தனது 'அறிவகம்' அமைப்பின் மூலமாக அந்த பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக அளித்து வருகிறார்.
பூர்வீக வீட்டையே கொடையாக கொடுத்த வள்ளல்
திருவாதவூர் சிவன் கோயிலில் பேஷ்காராக பணியாற்றிய தனது தந்தை குருசாமியின் நினைவாக உருவாக்கிய 'அறிவகம்' என்ற அமைப்பின் மூலம், யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தனது பூர்வீக வீட்டையே கொடையாக வழங்கி, அதனை நூலகமாகவும் மாற்றியுள்ளார். இங்கு பயின்ற 6 பேர் அண்மையில் பல்வேறு அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் தமிழர் பாரம்பரிய கலைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், குறிப்பாக அழிந்து கொண்டிருக்கும் கட்டைக்கால் எனப்படும் மரக்கால் ஆட்டத்தை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறார்.
அழியும் கலையை மீட்க முயற்சி
இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு வாட்ஸ்ஆப் கால் வழியாக பேசிய ராஜமாணிக்கம் ஐஏஎஸ், "நாங்கள் நடத்தி வரும் கோடைகால பயிற்சி முகாமில், கடந்த 2 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான ஒயிலாட்டம், மரக்கால் ஆட்டம் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறோம். தமிழ்நாட்டின் அடையாளங்களாக இருந்த இந்த கலைகள், தற்போது மிகவும் அரிதாகி வருகின்றன.
இதனை இளைய தலைமுறையினர் மத்தியில் அறிமுகப்படுத்தி, புதுப்பிக்க வேண்டும். அதே நேரம் நமது சமூக கலாச்சார அடையாளங்களை அறிந்து கொண்டு, அடுத்த தலைமுறைக்கு அவர்கள் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

அந்த வகையில், மரக்கால் ஆட்டப் பயிற்சியை ஆசிரியர்கள் சிறப்பான முறையில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகின்றனர். கலைகளைப் பாதுகாப்பதுடன், கலை வழியே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதும், அதன் வழியே கற்றுக் கொள்வதையும் இந்த முயற்சி ஊக்குவிக்கும். அறிவுத்திறனும், படைப்புத்திறனும் நிச்சயம் மேம்படும்,” என உறுதியாக தெரிவித்தார்.
சிறந்த வல்லுநர்கள் மூலம் பயிற்சி:
பயிற்சிகளை ஒருங்கிணைத்து வழி நடத்தி வரும் சக்கிமங்கலம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் தென்னவன், “இப் பயிற்சிகள் அனைத்தும் மாணிக்கவாசகர் திருக்கோயில் வளாகத்தில் தான் நடைபெறுகின்றன. சில பயிற்சிகள் திருவாதவூர் கோயிலின் பின்புறமுள்ள 'அறிவகம்' பயிற்சி மையத்திலும் நடைபெற்று வருகின்றன.
ராஜமாணிக்கம் ஐஏஎஸ் முயற்சியால் கடந்த 3 ஆண்டுகளாக இப்பயிற்சி முகாமை நடத்தி வருகிறோம். இதனை தொடங்கிய முதலாம் ஆண்டில் 520 மாணவர்களும், அடுத்த ஆண்டில் 750 மாணவர்களும், இந்த ஆண்டு 1,150 மாணவர்களும் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் அனைத்தும் அந்த துறையின் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்படுகிறது.
அழிந்து வரக் கூடிய தமிழர்களின் பாரம்பரியக் கலையான கட்டைக்கால் ஆட்டத்தை கடந்த 2 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். சுமார் 40 மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது வழங்கப்படும் 14 வகையான பயிற்சிகள் இந்த ஒரு மாதம் மட்டுமன்றி, தொடர்ந்து ஆண்டு முழுவதும் வழங்குவதற்கான கலைக்கூடமாக உருவாக்குவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்,” என்றார்.
மாணவர்கள் உடல் நலத்திலும் அக்கறை:
மேலும் பேசிய அவர், “நீர்வள மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலான சிறப்பு பயிற்சியின் பொருட்டு அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் 'ஹியூபர்ட் ஹெச் ஹம்ப்ரே ஃபெல்லோஷிப்'க்காக தேர்வு செய்யப்பட்டு, அங்கே பயிற்சி மேற்கொண்டு வரும் ராஜமாணிக்கம் ஐஏஎஸ், தீவிர பயிற்சி நேரத்திற்கு இடையிலும் தனது ஊரில் நடைபெற்று வரும் இந்தப் பயிற்சி முகாமுக்குத் தேவையான ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி ஊக்குவித்து வருகிறார்.
மேலும், பயிற்சிக்காக வருகை தரும் மாணவ, மாணவியருக்கு நாள்தோறும் மோர், சுண்டல், பட்டாணி, பயறு ஆகியவற்றை வழங்கி அவர்களது உடல் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறார்,” எனவும் கூறினார்.
கலையோடு கல்வி கற்க வாய்ப்பு:
மதுரை ஸ்கூல் ஆஃப் டிராமா நிறுவனரும், மரக்கால் ஆட்டக் கலைஞருமான உமேஷ் கூறுகையில், "அறிவகம் அமைப்பின் சார்பாக பல்வேறு விதமான பயிற்சிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி வருகிறோம். இதில் முக்கியமாகக் கருதப்படுவது மரக்கால் ஆட்டம்.
இது பண்டைய காலம் தொட்டு தற்போது வரை பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மரக்காலை தங்களது கால்களோடு பின்னிப் பிணைந்து நீர்நிலைகளைக் கடக்க, வெள்ளக் காலங்களில் செல்வதற்கோ அல்லது ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவதற்கோ பயன்படுத்தியுள்ளனர். பின்னர், இது கலையாக மாறியுள்ளது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள மதுரை, சேலம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் இந்த மரக்கால் ஆட்டம் கோயில் திருவிழாக்களில் இன்றும் ஆடப்பட்டு வருகிறது. இந்த ஆட்டம் மாணவர்களின் கற்றல் திறனை, கவனிக்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது. கலையோடு சேர்ந்து கல்வி கற்பதற்கான வாய்ப்பாகவும் உள்ளது. மரக்கால் ஆட்டத்திலேயே சிலம்பம், சுருள்வாள், பூப்பந்து சுத்துதல், பறையிசைத்தல் உள்ளிட்ட பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம்," எனக் கூறினார்.
கவனிக்கும் திறன் அதிகரிப்பு:
ஒத்தக்கடையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி வெண்பா கூறுகையில், “கோடைகால பயிற்சி முகாமில் பல்வேறு வகையான கலைகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை 'அறிவகம்' அமைப்பு உருவாக்கிக் கொடுத்துள்ளது. எனக்கு மரக்கால் ஆட்டத்தில் ஈடுபாடு உள்ளதால், அதில் சேர்ந்துள்ளேன். இதன் மூலம் கவனிக்கும் ஆற்றல் ஏற்படுவதை உணர முடிகிறது.
இதையும் படிங்க: தென்காசியின் அடையாளமாக திகழும் அரண்மனை வீடு - 8 தலைமுறையை தாங்கி கம்பீரமாக நிற்கும் அதிசயம்! |
நமது மனதை ஒரு நிலைப்படுத்தி கற்றுக் கொள்ள ஏதுவாக இந்த மரக்கால் ஆட்டம் உள்ளது. அழியும் நிலையில் உள்ள ஒரு கலையை புத்துயிரூட்டும் வாய்ப்பாக இதனை பார்க்கிறேன். 40-க்கும் மேற்பட்டோர் உள்ளதால், எனக்கு புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். விடுமுறையில் வீட்டில் இருப்பதை விட, இதுபோன்ற கலைகளை கற்பது நல்லது,” என உற்சாகமாக பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய திருவாதவூரைச் சேர்ந்த மாணவன் நிஷாந்த், "கடந்த இரண்டு வருடமாக கட்டக்கால் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். எனது பள்ளியில் பயிலும் நண்பர்களை விட, இங்கு எனக்கு நண்பர்கள் அதிகம். கட்டைக்கால் பயிற்சிலேயே பறையடித்தல், கம்பு சுத்துதல் போன்றவற்றையும் நாங்கள் இங்கே கற்றுக் கொள்கிறோம்," என்றார்.
இந்த பயிற்சிகளில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ் வழங்குவதுடன், சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் திருவாதவூர் கிராமத்தில் நடைபெறும் விழாவில் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நம் கடமை:
அழிவின் விளிம்பில் உள்ள நமது பாரம்பரியக் கலைகளை வெறும் ஒரு பொழுது போக்காக கருதாமல், அதனை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கடமை அனைவருக்கும் உள்ளது. இதனை செய்ய தவறும்பட்சத்தில், வருங்கால சந்ததியினர் நம் அடையாளத்தின் ஒரு பெரிய பகுதியை இழக்க வாய்ப்புள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.