கரூர்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது கடந்த 23-04- 2017 அன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சீத்தம்பட்டி காலனியில் நடைபெற்ற அம்பேத்கர் மற்றும் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது, இரு சமூகங்களுக்கிடையே மோதலை உருவாக்கியது மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதன் பின்னர் 8 மாதம் கழித்து 17-12-2017 அன்று காவல்துறையால் ஒரு வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன் பின்பு 6 மாதங்கள் கழித்து கடந்த 23-06-2018 அன்று அணு உலை எதிர்ப்பு போராட்ட வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருந்த முகிலனை அரவக்குறிச்சி காவல்துறையினர் கைது செய்து ஆஜர்படுத்தினர். பின்னர் கரூர் நீதிமன்றத்தில் அவருக்கு குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது.
இந்த வழக்கு மீண்டும் கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை தலைமை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலனுக்கு ஆதரவாக திருச்சி வழக்கறிஞர் கென்னடி, திருச்சி வழக்கறிஞர் கமருதீன், கரூர் வழக்கறிஞர் தமிழ்.ராஜேந்திரன், கரூர் ப.குணசேகரன், வழக்கறிஞர் அமர், வழக்கறிஞர் உதய ஜீவா, வழக்கறிஞர் சந்தானம், வழக்கறிஞர் ந.சண்முகம் உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.

அரசு தரப்பில் போடப்பட்ட சாட்சிகளை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாமல் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஜெயபிரகாஷ் இன்று (மே 23) வழக்கிலிருந்து முகிலனை விடுவித்து தீர்ப்பளித்தார். இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க தோழர்கள் சு.இராசேசு கண்ணன், தோழர். கண்ணன், சு.விஜயன், மே 17 இயக்கம் திலீபன், சமூக செயற்பாட்டாளர் சி.மோகன்ராஜ், விடுதலை சிறுத்தைகள் ரகுமான் மற்றும் சாமானிய நலக் கட்சி தோழர்கள் வழக்கில் விடுதலையான சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மற்றும் அவரது வழக்கறிஞர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்தனர்.
இதையும் படிங்க: "மதுரை நாகமலையில் இத்தனை வகை பாம்புகளா?" ஊர்வன சரணாலயம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!
இதைத்தொடர்ந்து முகிலன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''எனது சமூக செயல்பாட்டை முடக்க, சமூக செயல்பாட்டாளர்களை அச்சுறுத்த, மணல் கொள்ளை உள்ளிட்ட கனிமக் கொள்ளை எதிர்ப்பு செயல்பாட்டாளர்கள் மீது எடப்பாடி அரசால் ஏவப்பட்ட பொய் வழக்கு, முறியடிக்கப்பட்டது. இயற்கையை காக்கும் சமூக செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்கு போடுவதை அரசு விட்டுவிட்டு மக்களுக்காக செயல்பட வேண்டும்.
தமிழக காவல் துறையும் இதுபோன்று பொய் வழக்குகளில் ஆர்வம் காட்டாமல் பல்வேறு குற்ற வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிவதற்கு நேரம் ஒதுக்கி செயல்பட வேண்டும். தமிழகத்தின் நலனுக்காக போராட்டங்களில் நாங்கள் பேசி வந்ததை தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிரான வாதத்தில் முன்வைத்து வருகிறது." என்று முகிலன் கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.