கரூர்: மண்மங்கலம் வட்டம் பஞ்சமாதேவி கிராமத்தில் உள்ள வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 15) மதியம் 12.30 மணியளவில் பொரணி பகுதியைச் சேர்ந்த சிவாஜி (40), மாயவன் (24),வெண்ணைமலைகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (44) ஆகிய மூவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதிதாகக் கட்டி வரும் வீட்டிற்கு அருகே மஞ்சுளா என்பவரது மண் வீடு இருந்தது. அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாகச் சிறிது சேறும், சகதியுமாகக் காணப்பட்டது. இந்நிலையில் பொன்னுசாமி புதிய வீட்டிற்குக் கட்டுமான பணிக்காக வந்த மூவருள் ஒருவரான சிவாஜி, மஞ்சுளா என்பவரது மண் வீட்டுக்கு அருகே நேற்று இரவு நின்று வேலையைச் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண் வீடு இடிந்து சரிந்து விழுந்தது.
இதில் கட்டுமான தொழிலாளி சிவாஜி இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளார். அவரை காப்பாற்ற சென்ற சக கட்டுமான தொழிலாளிகளான மாயவன் மற்றும் ராஜேந்திரனும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து கரூர் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த மூவரையும் மீட்டனர்.
இதில் சிவாஜி என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கட்டுமானத் தொழிலார்கள் இருவர் தலையில் காயமும், காலில் எலும்பு முறிவும் ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை அவசர ஊர்தி மூலம் காவல் துறையினர் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மேலும் உயிரிழந்த சிவாஜியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வெங்கமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டுமான பணியின் போது, மண் இடிந்து விபத்து ஏற்பட்டதில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.