சிவகங்கை: கரு.பழனியப்பன் தனது பெரியப்பா பழ.கருப்பையா மீது காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா இயக்குநர் கரு.பழனியப்பன், பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் டி.பிளாக், மந்திர புன்னகை, நட்பே துணை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தா கரு.பழனியப்பன் சொந்த ஊராகும். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான கரு.பழனியப்பன், தனது பெரியப்பாவும், தமிழக தன்னுரிமை கழகத்தின தலைவருமான பழ.கருப்பையா மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அப்புகாரில், தான் கலப்பு திருமணம் செய்துள்ளதால் கடந்த 21 வருடங்களாக ஒதுக்கி வைப்பதாகவும், என்னுடன் உறவினர்கள் யாரையும் சேர விடாமல் தடுப்பாதகவும், தான் ஜாதிய வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதாக புகார் அளித்துள்ளார்
மேலும் நான் 2004இல் காதல் திருமணம் செய்து கொண்டேன். திருமணம் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன், என் தந்தை சின்ன கருப்பையாவின் அண்ணனும், எங்கள் குடும்பத்தின் மூத்தவருமான பழ.கருப்பையா என்னை அழைத்து வேறு சமூகத்தில் காதல் திருமணம் செய்யக்கூடாது என்றார்.
மீறி செய்தால் குடும்பத்திற்குள்ளும், சுற்றத்தார்களுக்குள்ளும் என்னை தனிமைப்படுத்தி விடுவதாக மிரட்டினார். என் வீட்டாரின் சம்மதம் இருந்ததால் காதல் திருமணம் செய்து கொண்டேன். கடந்த 21 வருடமாக என் குடும்பம் மற்றும் உறவினர்களைச் சேர்ந்த எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளுக்கும் என்னை அழைக்கக் கூடாது என அந்த நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார" என்றார்.
தொடர்ந்து பேசிய கரு பழனியப்பன், எங்களது காரைக்குடி பூர்வீக வீட்டில் ஐந்தில் மூன்று பங்கு வைத்திருக்கும் என்னை அடிப்படை வசதிகள் செய்து கொள்வதற்கும் சேதமடைந்த பகுதிகளை சீர் செய்யும் பணிகளையும் தடுத்து வருவதாகவும் தெரிவித்தார். புகாரை பெற்றுக் கொண்ட மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கரு. பழனியப்பன், “ஜூன் 3ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் விழாவில் நான் சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்டது குறித்து மனம் திறந்து பேசினேன். பிறகு அதுகுறித்து விரிவாக தனியார் யூடியூப் சேனலில் 40 நிமிடங்கள் பேசினேன். அதனை எழுத்துப்பூர்வமாக தற்போது மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகாராக அளித்துள்ளேன்.
2025 ஆம் ஆண்டும் நடக்கும் இந்த சூழலில், தற்போதும் சாதிய ரீதியாக ஒடுக்குமுறை இருந்து வருகிறது. திருமணம் என்பது ஒரு ஆண், பெண்ணின் விருப்பம். அவர்களை நேரடியாக தாக்காமல் மறைமுகமாக தாக்குவதும் சாதிய வன்கொடுமை தான். என்னோடு உறவுகளை சேர விடாமல் தடுப்பது, என்னை ஆதரிப்பவர்களை தடுப்பதும் சாதிய வன்முறை தான். அதனை இந்த சமூகத்தில் பெரிய மனிதர்களாக காட்டி கொள்பவர்கள் செய்கிறார்கள். அவர்களை சட்ட ரீதியாக அணுக வேண்டும்” என கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.