சென்னை: வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய திமுக எம்பி கனிமொழியை வரவேற்க விமான நிலையத்தில் 2000-க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீஸாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜம்மு - காஷ்மீரில் பெகல்ஹாமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கவாதிகள் சுட்டுக் கொலை செய்தது இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், பாகிஸ்தான் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. பின்னர், ஏற்பட்ட புரிந்துணர்வின் அடிப்படையில் பதற்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக உலக நாடுகளிடம் விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்தும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் செயல்பாடு குறித்தும் விளக்கம் அளித்தனர். திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழுவினர் ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்றது. அங்கு முக்கிய பிரதிநிதிகளை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்தும் விளக்கினர்.

இந்த நிலையில் கனிமொழி தலைமையிலான குழு பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் இந்தியா திரும்பியது. டெல்லி வந்த திமுக எம்பி கனிமொழி அங்கிருந்து விமான மூலம் இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் கனிமொழியை வரவேற்க திமுகவினரும், அக் கட்சியின் மகளிர் அணியினரும் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கூடினர்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த கனிமொழிக்கு பூங்கொத்து கொடுத்து அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலானோர் கூடியதால் கனிமொழியை வரவேற்கும் போது போலீசாருக்கும், திமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு செல்வதாக கூறி விட்டு கனிமொழி காரில் புறப்பட்டு சென்றார். மேலும் ஏராளமான நிர்வாகிகள் காரில் வரவேற்க வந்ததால், விமான நிலையத்திற்கு வெளியே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.