சென்னை: ''பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை'' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்தார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 11) மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் ஒரே மேடையில் அமர்ந்து அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் அவர் உறுதி செய்துள்ளார். இதை, திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி எம்.பி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, '' பாஜகவுடன் ஒருபோதும் இனி கூட்டணி கிடையாது. அவர்களோடு மறுபடியும் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்று சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கக் கூடிய அதே மேடையில் உள்துறை அமைச்சர் அதிமுகவிற்கும், பாஜகவுக்கும் இடையே தேர்தல் கூட்டணி அமைந்துள்ளது என்று அறிவித்துள்ளார்.
பாஜகவின் மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களை, திட்டங்களை எதிர்த்து கொண்டு இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அதே மேடையில் இன்று மௌனமாக அமர்ந்து அந்த கூட்டணியை ஆமோதித்து, ஏற்றுக்கொள்வதை பார்க்க முடிந்தது. இது பட்டவர்த்தனமாக, தெளிவாக தன்னுடைய இயக்கத்தை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் செய்திருக்கக் கூடிய மிகப்பெரிய துரோகம்.
இதைத்தான் முதலமைச்சர் தொடர்ந்து சொன்னார். அவர்கள் பிரிந்து விட்டதாக சொன்னாலும் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். இந்த கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை சுட்டி காட்டிக்கொண்டிருந்தார். அந்த உண்மை இன்று வெளியாகி இருக்கிறது. மக்களை அவர்கள் வெகுநாள் ஏமாற்ற முடியாமல் இந்த கூட்டணியை இன்று வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
காசியில் தமிழ்ச்சங்கம் நடத்தி இருக்கிறோம் என்றும், நாங்கள் தமிழுக்காக தொண்டு செய்திருக்கிறோம் என்றும் சொல்லி இருக்கிறார்கள். காசி தமிழ் சங்கம் நடத்துவது என்பது தமிழ் காசிக்கு செய்திருக்கிற நன்மையாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனால் தான் தமிழ் வளர்ந்ததாக கூறுவது ஏற்க முடியாது.
முதலமைச்சர் பலமுறை தொடர்ந்து சொல்லியிருக்கிறார். சமஸ்கிருதத்ததுக்கு கிட்டத்தட்ட 2400 கோடிக்கு மேல் ஒன்றிய அரசாங்கம் செலவழிக்கிறது. ஆனால் இவர்கள் வளர்க்கிறதா சொல்லக் கூடிய தமிழுக்கு இவர்கள் 100 கோடி கூட ஒதுக்கீடு செய்வது இல்லை. இப்படி பாரபட்சமாக நடந்து கொள்ளக்கூடிய ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடத்தக்கூடிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கூட தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்கவில்லை.
இவர்கள் என்ன தொண்டை தமிழுக்காக செய்து விட முடியும்? எங்கேயாவது செல்லும்போது பிரதமர் திருக்குறளை சொல்லுவதும், நிதி அமைச்சர் திருக்குறளை மேற்கோள் காட்டுவதும் தமிழ் வளர்க்கக்கூடிய முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. தமிழுக்காக என்ன செய்திருக்கிறார்கள்? இந்தி மொழியை தொடர்ந்து திணித்துக் கொண்டிருப்பதை விட அவர்கள் தமிழுக்கு எதையும் செய்தது கிடையாது. அதை தாண்டி மும்மொழிக் கொள்கை, வக்பு சட்டத்திருத்த மசோதா, நீட், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி என அனைத்தையும் எதிர்த்து குரல் கொடுக்கிறோம் என்று சொன்னது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்று அவரது நிலைப்பாடு என்ன? சமீபத்தில்தான் நாங்கள் சிறுபான்மை மக்களுடன் நிற்போம் என ஆணித்தரமாக பேசிய எடப்பாடி பழனிசாமி இன்று அதே மேடையில், யார் மசோதாவை நிறைவேற்றினார்களோ அவர்களோடு மேடையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அண்ணா, ஜெயலலிதா போன்றவர்களை தரம் தாழ்ந்து விமர்சித்த ஒரு தலைவரோடு இன்று மேடையில் அமர்ந்து கொண்டு கூட்டணியை யாரோ ஒருவர் அறிவிக்க அமைதியாக இவர் கேட்டுக்கொண்டிருக்க கூடிய நிலையில் உள்ளார்.
யாருடைய தலைமையில் கூட்டணி அமைகிறதோ? அவர்களே அந்த கூட்டணி பற்றி அறிவிப்பார்கள், பேசுவார்கள். ஆனால் பேசக்கூடிய உரிமைகூட இல்லாத நிலையிலே கூட்டணி அறிவிக்கப்படுகிறது. தங்களுடைய தலைவர்களை எல்லாம் இழிவாக பேசிய ஒருவரோடு மேடையிலே அமர்ந்து கொண்டு கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார். இன்று அதே தலைவர்களை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து அளிக்க கூடிய ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இது கட்சிக்கு செய்யக்கூடிய துரோகம். தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்க கூடிய மிகப்பெரிய துரோகம். அதனால் இதற்கு தகுந்த பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் சொல்லித் தர வேண்டும்.
இதையும் படிங்க: கனரக மின் வாகனங்களுக்கான 'அதிவேக சார்ஜர்'; சென்னை ஐஐடி தயாரிப்புக்கு 'தேசிய தரச்சான்று'!
சிறுபான்மையினர் தெளிவாக எந்த காலத்திலும் இவர்களை நம்பியது இல்லை. வரக்கூடிய தேர்தலில் தமிழ்நாட்டுக்கு இவர்கள் செய்திருக்கும் ஒரு மிகப்பெரிய துரோகத்துக்கு சரியான பாடத்தை கற்றுத் தருவார்கள். தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற பாஜகவிற்கும், ஒன்றிய அரசாங்கத்துக்கும் தங்களால் முடிந்த ரத்தின கம்பளத்தை இவர்கள் விரித்து இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு இவர்கள் செய்திருக்க கூடிய மிகப்பெரிய துரோகம்.
பாசிச அரசாங்கத்தை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், தமிழ்நாட்டு மக்கள் நிராகரித்து இருக்கக் கூடியவர்களை ரத்தின கம்பளம் விரித்து, கதவுகளை திறந்துவிட அதிமுகவினர் முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு தகுந்த பாடத்தை தமிழ்நாட்டு மக்கள் வரக்கூடிய தேர்தலில் அவர்களுக்கு சொல்லித் தருவார்கள்.'' என்று கனிமொழி எம்.பி கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்