By எஸ்.ரவிசந்திரன்
சென்னை: சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியை முத்து கனகலட்சுமி மாணவர்களுக்கு தமிழ் எழுத்துகளை எளிமையாக எழுதவும், படிக்கவும் கற்றுத் தந்ததற்காக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்பட உள்ளார்.
ஆசிரியை கனகலட்சுமி கோவில்பட்டியைச் சேர்ந்தவர். எம்.ஏ., தமிழ் மொழியியல், இலக்கியம் படித்துள்ளார். தமிழ் பல்கலைக்கழகத்தில் பி.லிட்., பட்டமும், கரந்தை தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட்., பட்டமும் பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய இவர், தன் தமிழ் ஆர்வத்தால், இடைநிலை ஆசிரியராகப் பணியாற்ற விருப்பம் கொண்டு சென்னை, ஷெனாய் நகர் மாநகராட்சி பள்ளியில் பணியில் சேர்ந்தார்.

தமிழில் எழுத, படிக்கத் தெரியாத மாணவர்களை தேர்வு செய்து கடந்த 23 ஆண்டுகளாக எளிய முறையில் அவர்களுக்கு கற்பித்து தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்த்து வருகிறார். விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் கிராமத்தில், ஆறு பள்ளிகளைச் சேர்ந்த, 100 மாணவர்களை தேர்வு செய்து, 40 நாட்களில், அவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க கற்றுக் கொடுத்தார். அதே போல திருவண்ணாமலை மாவட்டத்தில், 1,56,710 மாணவர்களை தமிழ் மொழியை வாசிக்க வைத்து, மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றார்.
முனைவர் பட்டம்: 2,000 ஆசிரியர்களுக்கு எளிய முறை தமிழ் வாசிப்பை கற்பிப்பதற்கான பயிற்சிகளை அளித்துள்ளார். மேலும், 'கியூஆர் கோடு ஸ்கேன்' செய்தால், எளிய தமிழ் வாசிப்பு பயிற்சி பெறும் வகையில், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும், சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 'தமிழ் வாசிப்பு திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவரது தமிழ் தொண்டை பாராட்டும் வகையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கெளரவிக்கப்பட உள்ளார்.
தமிழ் கற்பிக்கும் முறை: ஈடிவி பாரத் தமிழ்நாடுவிடம் பேசிய தமிழ் ஆசிரியை கனகலட்சுமி, "மாணவர்களுக்கு எழுத்துகளை கற்பிக்கும் போது அதனை வரி வடித்தில் கற்பிக்க வேண்டும். அதற்கான முறைகள் நன்னூலில் ஏற்கனவே உள்ளன. மாணவர்களுக்கு வரி வடிவத்தில் உயிர் எழுத்துகளையும், மெய்யெழுத்துக்களையும் கற்பித்த பின்னர், உயிர்மெய் எழுத்துகளை கற்பிக்க வேண்டும்.
வரி வடிவத்தில் கற்பிக்கும் போது, சுழி, கீழ்ப்பிறை, கீழ்விலங்கு, படுக்கைக்கீற்று, ஏறுகீற்று, இறங்குக்கீற்று, சாய்வுக்கீற்று, வளைவுக்கீற்று, கால், மேல்விலங்கு, சுழிமேல்விலங்கு, மடக்கேறுகீற்று, மடக்கேறுகீற்றுக்கால், கொம்பு, கொம்புசுழி, இரட்டைக் கொம்பு, கொம்புக்கால் ஆகிய வரி வடிவங்களைப் பயன்படுத்தி கற்பிக்கின்றேன்.
இதையும் படிங்க: மத்திய அரசு திட்டத்துக்கு மாநில அரசுதான் நிதி ஒதுக்குகிறது - மதுரையில் அமித்ஷா பேசியதற்கு சேலத்தில் பதில் அளித்த மு.க.ஸ்டாலின்
எனது தமிழ் பணி குறித்து அறிந்த லண்டன் தமிழ் சங்கம் எனக்கு விருது வழங்கி கெளரவிக்க உள்ளது. இது தமிழ் மொழிக்கு கிடைத்த பெருமையாக கருதுகின்றேன்" என்றார்.
அமைச்சர் பாராட்டு: இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆசிரியை கனகலட்சுமியை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். மேலும் அவர் எக்ஸ் தள பதிவில், "சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் தமிழ் ஆசிரியை கனகலட்சுமி இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் கெளரவிக்கப்படவுள்ளார். கனகலட்சுமி 'தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்' எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டார்.
தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மாணவர்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளார். மேலும் தமிழ் பணியினைத் தொண்டாக கருதி பணியாற்றி வருகிறார். இப் பணியினைப் பாராட்டி Croydon Tamil Sangam இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இவரை கெளரவிக்க உள்ளது. தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார். தமிழால் உயர்ந்துள்ள ஆசிரியை கனகலட்சுமிக்கு தமிழனாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்