சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக தாக்கல் செய்யப்பட்ட திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில், மநீம கமல்ஹாசன் முதல் முறையாக எம்.பி ஆகிறார்.
தமிழ்நாட்டில் காலியாகும் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் (ஜூன் 9) நிறைவு பெற்றது. இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது.
மாநிலங்களவை எம்.பி பதவி
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக உறுப்பினர்களான வில்சன், சண்முகம், அப்துல்லா, அதிமுக-வை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
எனவே, காலியாகும் இந்த 6 இடங்களுக்கும் ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கியது.
அதில், மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான சிவசுப்பிரமணியத்திடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
சுயேட்சை வேட்பாளர்கள் மனு நிராகரிப்பு:
அதே போல, அதிமுக சார்பில் போட்டியிடும் இன்பதுரை, தனபால் ஆகியோரும் ஜூன் 6 ஆம் தேதியன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதற்கிடையே, 7 சுயட்சை வேட்பாளர்களும் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று அதற்கான பரிசீலனை நடைபெற்றது.
விதிமுறைப்படி, வேட்பு மனுவுடன் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிவு கடிதம் அளித்திருக்க வேண்டும். அந்த அடிப்படையில், சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேருக்கு யாரும் முன்மொழிவு கடிதம் தரவில்லை என்பதால் பரிசீலனையின் போது அவர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையும் படிங்க: மீண்டும் செயல்படத் தொடங்கிய தூத்துக்குடி - மதுரை சுங்கச்சாவடி! உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை! |
போட்டியின்றி தேர்வு:
அதனைத் தொடர்ந்து, திமுக சார்பில் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதே போல, அதிமுக சார்பில் போட்டியிடும் இன்பதுரை, தனபால் ஆகியோரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தற்போது திமுக, அதிமுக, மநீம சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள 6 பேரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதி ஆகியிருக்கிறது. வேட்பு மனுவை திரும்ப பெற ஜூன் 12ஆம் தேதி கடைசி நாளாகும். அதனைத் தொடர்ந்து, ஜூன் 12 ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்