சென்னை: இஸ்ரேல் அரசு பாலஸ்தீனம் மீது நிகழ்த்தி வரும், இன அழிப்பு போரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளின் பாலஸ்தீன ஆதரவு இயக்கம் சார்பில் சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் இன்று (ஜூன் 24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல் கட்சியை சேர்ந்த பழ.ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, ''பாலஸ்தீன மக்கள் மீது குண்டு போட்டு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்து இருக்கிறார்கள். அங்கு வாழுகிற மக்களுக்கு மின்சாரம், குடிநீர் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய மக்களுக்கு சர்வதேச அமைப்புகள் உணவு பொருட்கள், நிவாரண பொருட்கள் கொண்டு போனால் அதையும் இஸ்ரேல் அரசாங்கம் தடை செய்து இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு கொடூர செயலில் ஈடுபட்டு இருக்கக்கூடிய இஸ்ரேல் அரசை அமெரிக்க அரசாங்கம் முழுமையாக ஆதரித்து வருகிறது. பாலஸ்தீனம் மீது குண்டு போட்டுக் கொண்டு இருந்த இஸ்ரேல் இன்றைக்கு ஈரான் நாட்டின் மீது குண்டு போட்டு, அதற்கு ஆதரவாக இன்று அமெரிக்கா ஈரான் மீது குண்டு போட்டு இருக்கிறது. அதற்கு ஈரானும் எதிர்த்து தாக்கியிருக்கிறது.

பாலஸ்தீனத்தில் போர் நடைபெற்றிருக்கிறது என்று நாம் அமைதியாக இருக்க முடியாது. இன்றைக்கும் மூன்றாம் உலகப்போராக வளர்ந்து விடும் என்ற ஒரு அச்சம் இருக்கிறது. இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டும். இஸ்ரேல் அரசாங்கம் பாலஸ்தீனத்தில் இருந்து வெளியேற வேண்டும். உலகம் முழுவதும் இருந்து இன்று கண்டன குரல்கள் எழும்பி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வந்த பிறகு உலகத்தில் என்ன நடக்கும் என்று யாரும் எதுவும் சொல்ல முடியாது. பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஈரான் நாட்டின் மீதும் குண்டு போட்டு இருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது மட்டுமல்ல. இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் ஆதரவாக இருப்பது உலக நாடுகளுடைய கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள்.
மக்களை கொன்று குவிக்க கூடிய இஸ்ரேல் அரசுக்கு ஆதரவளிக்கக்கூடிய அமெரிக்க அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது 140 மக்களை கொண்டிருக்கக்கூடிய இந்தியா மக்களுக்கு மிகப்பெரிய அவமானங்கள் ஆகும். இடதுசாரி கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நாடு முழுவதும் இதற்கு மக்கள் மத்தியில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும். மூன்றாவது உலகப்போர் வந்து விடக்கூடாது. இதற்கு அடிப்படை காரணம் இஸ்ரேலை கண்டிக்க வேண்டும். அமெரிக்க அரசை இந்திய அரசு எதிர்த்து சமாதான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
இதையும் படிங்க: "'மா' விவசாயிகளுக்கு இழப்பீடு" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகம் மற்றும் இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா அரசியல் கட்சிகளும் இன்றைக்கு மூன்றாவது உலகப்போரை தடுத்து வரும் இடதுசாரி கட்சிகள் போல மற்ற கட்சிகளும் முன்வர வேண்டும். மதுரையில் முருகன் மாநாட்டில் பேசிய அண்ணாமலை யூதர்களை போல தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று அவமானப்படுத்துகிற வகையில் பேசி இருக்கிறார்.
யூதர்களையும், தமிழ் மக்களையும் சமமாக பார்ப்பது தவறானது. இஸ்ரேல் அரசாங்கம் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதை கண்டித்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இரண்டாவது உலகப் போர் தொடங்கிய காலத்தில் இருந்து அமெரிக்கா முழுக்க முழுக்க உலகத்தில் யுத்தம் நடக்கணும் என்று நினைக்க கூடியவர்கள். அப்படி அந்த போர் நடந்தால் தான் அவர்களுக்கு ராணுவ பொருளாதாரம் வளமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் மற்ற நாடுகளில் போர் நடக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது." என, கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்