சென்னை: அதிமுக-பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இரண்டாவது முறையாக ஜெயக்குமார் நழுவலாகப் பதில் அளித்தார்.
உள்ளாட்சி தேர்தலின் போது பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவை சேர்ந்த நபர் ஒருவரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தோம். ஆனால் அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், பிடித்துக் கொடுத்த என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர்.
ராசியான நீதிமன்றம்: இந்த வழக்கில் 22 நாட்கள் புழல், பூந்தமல்லி சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தேன். முன்னாள் அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பதவிகளில் இருந்த போதிலும் எனக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்கவில்லை. பின்னர் இது குறித்து வழக்கறிஞர்கள் எடுத்துரைத்த பிறகு எந்த சலுகைகளும் இல்லாத முதல் வகுப்பு கொடுத்தார்கள். என் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என்றாலும் நீதிமன்றத்தை மதிக்க வேண்டும் என்பதால், இன்றைய தினம் இந்த நீதிமன்றத்தில் ஆஜராகினேன்.
இதையும் படிங்க: மாநில சுயாட்சி - முன்னாள் நீதிபதி தலைமையில் குழு: 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 1983 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றிற்காக ஆஜரானேன். இதன் பின்னர் அரசியலில், பல்வேறு உயர் பொறுப்புகள் எனக்கு கிடைத்தன. கால சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து இதே நீதிமன்றத்தில் இப்போது ஆஜராகி உள்ளேன். இதை வைத்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு குறிப்பாக அதிமுகவுக்கு எதிர்காலம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.
முதலை கண்ணீர்: மாநில சுயாட்சி குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. திமுகவினர் கண்ணாடி முன் நின்று, தீர்மானம் போடுவதற்கு தகுதி ஆனவர்கள் தானா? என்று கேட்டுக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிட்டிக்கு பயந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் சேர்ந்து கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தார்கள். அதன் பின்னர் தான் தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை சிறையில் வதைபடுகின்றனர். கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர்.
மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் தாரை வார்த்து விட்டு இன்னும் ஒரு ஆண்டில் தேர்தல் வருகிறது என்பதற்காக மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வருகிறார்கள். இதனை மக்கள் நன்கு அறிந்தே வைத்திருக்கிறார்கள். அதே போல திராவிடம் என கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் செயலில் தான் இந்த ஆட்சி ஈடுபடுகிறது. அதிமுக-பாஜக கூட்டணி குறித்து எங்களது பொதுச் செயலாளர் பேசியுள்ளார். அந்த கருத்துதான் என் கருத்தும்,"என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.