சென்னை: வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம், சென்னையில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில், இன்று (ஏப்ரல் 10) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசேகரன், குணசேகரன் மற்றும் முருகையன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள், “ ஜாக்டோ-ஜியோ தனது நியாயமான 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றுவோம் என்று நம்பிக்கை அளித்ததோடு, தேர்தல் வாக்குறுதியிலும் உறுதிப்படுத்தினார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆம் மாநில மாநாடு மற்றும் 2022 ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தான் அளித்த வாக்குறுதியை மறக்கவில்லை, மறுக்கவில்லை, மறைக்கவில்லை என மீண்டும் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால், 4 ஆண்டுகள் கழிந்தும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
இதையும் படிங்க: "எனக்கு பதவி ஆசை இல்லை; அன்புமணியின் பதவி பறிப்பு ஏன்?" - பாமக தலைவர் ராமதாஸ் விளக்கம்! |
அதனைத் தொடர்ந்து, 2025 பிப்ரவரி 24 ஆம் தேதி நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு ஜாக்டோ-ஜியோவை பேச்சவார்த்தைக்கு அழைத்து. நான்கு வார கால அவகாசம் தெரிவித்து, அதற்குள் கோரிக்கைகள் குறித்து முடிவெடுப்பதாக நம்பிக்கை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மார்ச் 13 ஆம் தேதி மீண்டும் ஜாக்டோ-ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த தமிழ்நாடு முதலமைச்சர், மூன்று குழுக்களாக சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து நம்பிக்கை அளித்தார்.
அதன் அடிப்படையில், நடப்பு பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர், அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், 2025-2026 பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது. எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியாகின. அதனைத் தாெடர்ந்து கடந்த மார்ச் 23 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்.
இந்த நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகவே பழைய ஓய்வூதியம் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைப் பேரணி நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மே 24 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கோரிக்கை மாநாடு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேறாவிட்டால் தொடர்ந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை கோரிக்கை மாநாட்டில் அறிவிப்போம்” என தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்