சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டதால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. ஆளும் திமுக தனது கூட்டணியை பலப்படுத்தும் வேலையில் இறங்கி உள்ளது.
அதே சமயம் எந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாவது இந்த முறை தமிழ்நாட்டில் ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்று அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது. இதன் காரணமாகவே இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று முழங்கி வந்த அதிமுக சமீபத்தில் பாஜகவை தன்னுடைய கூட்டணியில் இணைத்துக் கொண்டது.
வழக்கம் போல விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பாமக, தேமுதிக உள்பட சில கட்சிகள் யாருடன் கூட்டணி? என்று இன்னமும் அறிவிக்காமல் உள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஜூலை மாதம் மாநிலங்களவை எம்பி பதவி அளிக்கப்பட உள்ளதால் திமுக கூட்டணியை விட்டு வெளியேற வாய்ப்பு இல்லை என்றே பரவலாக பேசப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் முதல்முறையாக தேர்தல் களத்தில் அடியெடுத்து வைக்க உள்ளதால் அவரது தவெக கட்சியில், அடுத்தடுத்து பிரபலங்கள் இணைவார்கள் என்று பரவலாக சொல்லப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தவெகவில் இணைந்தார்.
அவருக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் விஜய் கட்சிக்கு வேறு எந்த பிரமுகர் வருவார்? என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு பணியை நேற்று (மே 22) ராஜினாமா செய்த அருண்ராஜ் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: "மதுரை நாகமலையில் இத்தனை வகை பாம்புகளா?" ஊர்வன சரணாலயம் அமைக்க வலுக்கும் கோரிக்கை!
இவர், கடந்த பல மாதங்களாகவே தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு ஆலோசனை வழங்கி வந்ததாகவும், ஐ.ஆர்.எஸ் எனப்படுகிற இந்திய வருவாய்த்துறையில் உயரதிகாரியாக இருந்ததால் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர், திடீரென தனது பணியை ராஜினாமா செய்ததை வைத்து பார்க்கும்போது அருண்ராஜ் விரைவில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
அருண்ராஜ், சேலத்தை சேர்ந்த மருத்துவர் ஆவார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ் வருமானவரி துறை அதிகாரியாக சென்னையில் பணியை தொடங்கினார். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சேகர் ரெட்டி நண்பர் வீட்டில் ரெய்டு நடத்தி ₹70 கோடி பணம் கைப்பற்றி மத்திய அரசின் நன்மதிப்பை பெற்றவர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பீகார் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட அருண்ராஜ் நேற்று (மே 22) தனது அரசு பணியை ராஜினாமா செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விஜய்யுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர் என்று கூறப்படுவதால் விரைவில் தவெக இணை பொதுச்செயலாளராக நியமிக்கப்படலாம் என்று அரசியல் நோக்கர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.