சிவகங்கை: சிவகங்கை அருகே மன்னர் முத்து வடுகநாதர் அவரது தளவாய் தாண்டவராயன் பிள்ளை ஆகியோரின் பெயர் பொறிக்கப்பட்ட 250 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவநர் புலவர் கா.காளிராசா, செயலர் இரா.நரசிம்மன், கள ஆய்வாளர் கா. சரவணன் ஆகியோர் கோவானூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், 250 ஆண்டுகள் பழமையான சிவகங்கை இரண்டாம் மன்னரான முத்து வடுகநாதர் மற்றும் தளவாய் தாண்டவராயன் பிள்ளை பெயர் பொறித்த கல்வெட்டை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா செய்தியாளர்களுக்கு தெரிவித்ததாவது, "கோவானூர் சிவகங்கை பகுதியில் உள்ள பழமையான ஊராகும் அங்குள்ள முருகன் கோயிலில் 13ஆம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகள், இந்திய தொல்லியல் துறையாலும், தமிழகத் தொல்லியல் துறையாலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஊர் முழுவதும் விரவிக் கிடக்கும் கல்வெட்டுகள்:
இங்கிருந்த சிவன் கோயில் ஒன்று அழிவு பெற்று ஊரில் பல இடங்களில் கல்வெட்டுகள் விரவி கிடக்கின்றன. இவ்வூர் குடிதண்ணி ஊரணி படித்துறையிலும், கோவானூர் கண்மாய் கலுங்குமடை போன்ற இடங்களிலும் 13ஆம் நூற்றாண்டு துண்டுக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
சிவகங்கைக்கு முன்னரே பெரிய ஊராக இருந்த கோவானூர்:
சிவகங்கைப் பகுதியில் சசிவர்ணத் தேவர் 1729 இல் ஆட்சிக்கு வந்ததாகவும், 27.1.1730 சிவகங்கை நகர் உருவாக்கப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கிறது. ஆனால், கோவானூர் குமிழி மடை 1708-களிலும் கலுங்குமடை 1719-களிலும் சேதுபதி மன்னர்களின் அரச பிரதிநிதிகளால் கட்டப்பட்டுள்ளன. சிவகங்கை உருவாகும் முன்னரே கோவானூர் முதன்மையான பகுதியாக விளங்கியுள்ளது.

சிவகங்கையின் இரண்டாவது மன்னர் முத்து வடுகநாதர்:
சிவகங்கையின் முதல் மன்னர் சசிவர்ணத் தேவர் மறைவுக்குப் பிறகு இரண்டாவது மன்னராக அவரது மகன் முத்து வடுகநாதர் பதவியேற்று சிறந்த ஆட்சியை செய்து வந்தார். வீரமங்கை வேலுநாச்சியாரின் கணவரான இவருக்கும் ஆற்காடுநவாப்பிற்கு ஆதரவாக வந்த ஆங்கிலப் படைக்கும் காளையார் கோயிலில் நடைபெற்ற சண்டையில், 25.6.1972 இல் முத்து வடுகநாதரும் இரண்டாவது மனைவி கௌரி நாச்சியாரும் கொல்லப்பட்டனர்.
தாண்டவராயன் பிள்ளை:
சிவகங்கைச் சீமையின் தளவாயாகவும், பிரதானியாகவும் விளங்கியவர். முதல் மன்னர் சசிவர்ணத் தேவர் தொடங்கி முத்து வடுகநாதர், அவரது மனைவி வேலுநாச்சியார் என மூவரிடமும் பணி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முத்து வடுகநாதர் பெயரும் தாண்டவராயன் பிள்ளை பெயரும் இடம் பெற்ற கல்வெட்டு:
கோவானூர் முருகன் கோயிலில் குடமுழுக்கு மராமத்து பணிக்காக, கோயிலின் அக்கினி மூலையில் இருந்த பழமையான மடப்பள்ளி இடிக்கப்பட்டு, அங்கிருந்த கற்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து இக்கல்வெட்டு கிடைக்கப் பெற்றுள்ளது.
கல்வெட்டு அமைப்பு:
இக்கல்வெட்டு தனிக் கல்லில் இல்லாமல், 13ம் நூற்றாண்டு எழுத்தமைதியில் எழுதப்பட்ட நான்கடி நீளமுள்ள கல்லை, பாதிவரை அழித்து இச்செய்தி குறுக்கு நெடுக்காக இரண்டரை அடியில் 14 வரியில் எழுதப்பட்டுள்ளது. 13ம் நூற்றாண்டு துண்டுக் கல்வெட்டு கடமை, நிலம் போன்ற சொற்கள் இடம் பெறுவதால் அதுவும் அன்றைய நாளைய தானத்தை பற்றிய செய்தியாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: “ஃபாசிச அணுகுமுறைகளை யார் கையில் எடுத்தாலும் எதிர்போம்” - தவெக தலைவர் விஜய் காட்டம்!
கல்வெட்டில் உள்ள செய்தி:
உ யுவ சித்திரை மாதம் 12ஆம் தேதி ஸ்ரீ முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவரவர்களுக்குப் புண்ணியமாக தாண்டவராயன் பிள்ளை அவர்கள் உபயமாக இந்த மடப்பள்ளி 'உ' என்று எழுதப்பட்டுள்ளது. இதன்வழி, கோவானூர் முருகன் கோயிலுக்கு முத்துவடுகநாதருக்குப் புண்ணியமாக தாண்டவராயன் பிள்ளை 1755ல் கட்டி வைத்த மடப்பள்ளி கல்வெட்டு இது என தெரிய வருகிறது.
சிவகங்கையின் இரண்டாவது மன்னர் முத்துவடுகநாதர் மற்றும் அன்றைய தளவாய், பிரதானி தாண்டவராயன் பிள்ளை ஆகிய இருவரின் பெயரும் பொறித்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதில் சிவகங்கை தொல் நடைக்குழு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது" என்று தெரிவித்தார்.