மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா நெரூர் வடக்கு பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 150க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோயில் இரண்டு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாகும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வைகாசி மாதத்தில் 3 நாட்கள் திருவிழா நடைபெறும்.
சேனப்பாடி பகுதியில் தொடங்கி நெரூர் மாரியம்மன் கோயில் வரை ஸ்ரீ ஆரவாயி அம்மன் தேர் சுற்றிவரும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக தேர் எங்கள் பகுதிக்கு வருவதில்லை. இதுகுறித்து இந்த ஆண்டு விழாக்குழுவிடம் முறையிட்டும் பலனில்லை. ஆகவே கரூர் மாவட்டம், நெரூர் வடக்கு பகுதி ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவின்போது பாகுபாடின்றி கோயில் தேர் பட்டியல் இனத்தவர் வசிக்கும் பகுதி வழியாகவும் செல்ல உத்தரவிட வேண்டும்" என்று ரமேஷ் தமது மனுவில் கோரியிருந்தார்.
இதையும் படிங்க: "செயினை சொம்புக்குள் போட்டா குழந்தை பிறக்கும்" சென்னை மந்திரவாதி நெல்லையில் சிக்கியது எப்படி?
இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பட்டியலின சமூகத்தினர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணன், "இந்த கோயில் இரு சமூகத்தினருக்கும் சொந்தமானதாகும். ஆனால், பட்டியலின மக்களை புறக்கணிக்கும் விதமாக கடந்த 15 ஆண்டுகளாக திருவிழா நடைபெற்று வருகிறது. இது ஏற்கத்தக்கது அல்ல,"என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,"ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு,"எனக் கூறினர்.
அப்போது எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்,"என வேண்டுகோள் வைத்தார்.
அப்போது நீதிபதிகள்,"பட்டியலின மக்கள் சாமி கும்பிட ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்களா? பதில் மனு தாக்கல் செய்கிறேன் என்ற பேரில் இந்த வழக்கை 15 ஆண்டுகள் இழுத்து கிடப்பில் போடுவீர்கள். அதுவரை பட்டியலின மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?"என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் மண்டல அலுவலர், விழாக்குழு உறுப்பினர்களான சக்திவேல், செந்தில், வேலு ஆகியோர் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.