திருநெல்வேலி: கிணற்றை தூர்வாரியபோது ஐம்பொன் கருடாழ்வார் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை பெருமாள் கோயில்களில் பிரதானமாக வைக்கப்படும் ஐம்பொன் சிலையாகும்.
திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே அரியகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் அருகில் ஊர் பொதுக்கிணறு ஒன்று உள்ளது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால், யூனியன் பொதுநிதி மூலம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக, கிணற்றில் இருந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு, அடியில் தேங்கியிருந்த சகதி அகற்றப்பட்டது. கிணற்றின் அடியிலுள்ள சகதியை அகற்றும் பணியின்போது, சுமார் 1.5 அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பழமையான இந்த சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர் யமுனா மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஐம்பொன் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர், இந்தச் சிலை தாலுகா அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மசாஜ் சென்டருக்கு போன கணவன் இப்படியா வரணும்? அதிர்ந்த மனைவி.. சென்னையில் அரங்கேறிய கொடுமை! |
பழங்கால ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலையை ஏதேனும் கோயிலில் இருந்து திருடி வந்த கும்பல், காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக கிணற்றில் வீசிச் சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக நாங்குநேரி மூளை கீரைப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் கோயில்களில் கருடாழ்வார் சிலை பிரதானமாக வைக்கப்படும் எனவே கோயில்களில் இருந்து சிலை திருடப்பட்டதா அல்லது பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சிலை பூமிக்கு அடியில் போடப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கும், தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அரிய சிலை கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.