சென்னை: தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, தர்மபுரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முதல் பல மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது அது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து வருவதால் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை அடித்து நொறுக்க போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்து வருவதால், ஜில் க்ளைமேட் நிலவி வருகிறது. இதனிடையே, இந்த மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படக் கூடும் எனவும் வானிலை மையம் அலர்ட் விடுத்துள்ளது.
அதேபோல, நீலகிரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உப்பு உற்பத்தி பாதிப்பு:
கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில், நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான உப்பளங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் உப்பள உரிமையாளர்களும், தொழிலாளர்களும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.
முதல்வர் ஆலோசனை:
இது ஒருபுறம் இருக்க, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளார். மழை நீர் வடிகால் தூர்வாருதல், சாலைப் பள்ளங்களை மூடுதல், மழையால் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பன உள்ளிட்ட விஷயங்கள் குறித்து முதல்வர் முக்கிய உத்தரவுகளை பிறப்பிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
