தூத்துக்குடி: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பெண்ணை, கட்டாயப்படுத்தி தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்த அரசு மருத்துவரை பணி நீக்கம் செய்து மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீர கருப்பசாமி. இவரது மனைவி ஜெயா கடந்த 2018-இல் தீக்காயத்துடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அங்கு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன், அந்த பெண்ணை தனது மருத்துவனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு பல நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனால், ஆத்திரமடைந்த கணவர் கருப்பசாமி மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த மனித உரிமைகள் ஆணையம் நேற்று முன்தினம் (மே 19) அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

அதில், " ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சத்தை தமிழ்நாடு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை மருத்துவர் பிரபாகர் ரூ.40 லட்சமும், மருத்துவர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி, குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் எனப் பிரித்து வழங்க வேண்டும்.
இதையும் படிங்க: பைகள் வைத்த பனியனில் ரூ.70 லட்சம் பணம், தங்கம் கடத்திய இளைஞர்: தமிழக-கேரள எல்லையில் போலீசாரிடம் சிக்கிய நபர்! |
ஒரு உயிர்போகக் காரணமாக இருந்த மருத்துவர் பிரபாகரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். மீண்டும் அரசுப் பணியில் நியமிக்கக் கூடாது. அதுமட்டுமின்றி, அவர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டது.

மேலும், "அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும்; மக்களின் குறைகளை அறிந்து கொள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் புகார் பெட்டியை வைக்க வேண்டும்" எனவும் தனது உத்தரவில் கூறியுள்ளது. இந்த தீர்ப்பு மருத்துவ துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணீர் மல்க வரவேற்பு:
இந்த உத்தரவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராணுவ வீரர் கருப்பசாமி உடல் நிலை பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தாய் தந்தையை இழந்த அவர்களது 10ஆம் வகுப்பு படிக்கும் மகன் கண்ணனை, ஜெயாவின் பெற்றோர் வளர்த்து வருகின்றனர்.

மனித உரிமை ஆணையத்தின் இந்த தீர்ப்பினை வரவேற்ற ராணுவ வீரர் குடும்பத்தினர், தவறு செய்கின்ற ஒவ்வொரு மருத்துவருக்கும் இது சரியான பாடமாக இருக்கும். ஜெயாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால், தற்போது அவர் உயிரோடு இருந்திருப்பார். ஆனால் அந்த மருத்துவர் திட்டமிட்டு, எங்களிடம் பணம் பறிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார். தற்போது, ஜெயாவின் இறப்பிற்கு நியாயம் கிடைத்துள்ளது என, கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.