சென்னை: கோவை அருகே காவல் உதவி ஆய்வாளரால் தாக்கப்பட்ட இளைஞருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் நகைக் கடையில் பணியாற்றி வரும் சர்தார் அலி, தன் நண்பர்களுடன் கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சி தேங்காய் பாறை ஆற்றை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் 3 பேர் ஒன்றாக சென்றுள்ளனர்.
அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கோவை கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சம்பந்தம், அவர்களின் பைக்கை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால், இரு சக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால், சர்தார் அலியை எஸ்.ஐ. சம்பந்தம் லத்தியால் முதுகில் தாக்கியுள்ளார். இதனால் நிலை தடுமாறிய பைக், முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.
எஸ்.ஐ. தாக்கியதால் விபத்தில் சிக்கி, தன்னுடைய கால் உடைந்து நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட சர்தார் அலி மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த மனுவானது, மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி. கண்ணதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சர்தார் அலியும், அவரது இரு நண்பர்களும் என 3 பேர் ஒரே பைக்கில் ஹெல்மெட் அணியாமல் விதிகளை மீறி சென்றதாகவும், வாகனத்திற்கு எந்த ஆவணங்களும் இல்லை என்றும் எஸ்.ஐ. சம்பந்தம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், பைக்கை இயக்கிய நபர் 18 வயதை அடையாத நபர் என்றும் எஸ்.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- இதையும் படிங்க: பயணிக்க மட்டுமல்ல படிப்பதற்கும் சென்ட்ரல் வாங்க.. பிரம்மாண்ட 'புத்தக பூங்கா' வந்தாச்சு... இவ்வளோ வசதிகளா!
- இதையும் படிங்க: "கோமாளி என்று யாரைச் சொல்கிறார்? நாங்கள் எல்லாம் புத்திசாலிகள்" - முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதில்
- இதையும் படிங்க: 'மருத்துவமனைக்கே போனதில்லை' எங்கே சென்றாலும் மிதிவண்டி தான்.. அசத்தும் மதுரை மீனாட்சி அம்மாள்!
அதே சமயம், காவல்துறை சமர்ப்பித்த அறிக்கையில், இதே போல மற்றொரு வழக்கில் காவல் ஆய்வாளர் சம்பந்தம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும், துறை ரீதியான விசாரணை நிலுவையில் இருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், வாகனத்தை நிறுத்தாமல் சென்றால் அந்த வாகன பதிவு எண்ணை குறித்து வைத்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், லத்தியால் தாக்கியது மனித உரிமையை மீறிய செயல் எனக் கூறி, பாதிக்கப்பட்ட சர்தார் அலிக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.