சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் தாய் மூகாம்பிகை நகர், காயிதே மில்லத் நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3 ஆவது தெரு ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. அவற்றில் சுமார் 600 வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி அனைத்தும் அடையாறு ஆற்றின் கரையோர நீர்பிடிப்பு பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்கள் என கூறப்படுகிறது.
இங்கு வீடுகளை கட்டி மக்கள் குடியிருந்து வரும் நிலையில் 81 குடும்பத்தினரை வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்கனவே அகற்றி பெரும்பாக்கம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் மற்றும் கிஷ்கிந்தா செல்லும் சாலை ஆகிய இடங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.30 லட்சம் ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கொடுத்து தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் எஞ்சியுள்ள ஆக்கிரமிப்பு நிலத்தையும் மீட்பதற்காக கடந்த 12 ஆம் தேதி வருவாய் துறை அதிகாரிகள் தயாராகினர். இது குறித்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் திடீரென ஒன்று கூடி கையில் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று (மே 20) காலை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10 வீடுகளை அகற்றினர்.
இதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக மீதம் உள்ள வீடுகளை அகற்ற வருவாய்த் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இன்று இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றதால் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இதையும் மீறியும் சிலர் திடீர் போராட்டத்தில் குதித்ததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, பேருந்து மூலம் அழைத்துச் சென்று தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து வீடுகளை இழந்த மக்களை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஆகியோர் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, வீடுகளை அகற்றுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக பெண்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''பொது மக்களின் கண்ணீரையும், அவர்களின் கவலை தோய்ந்த நியாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் நீதிமன்றத்தை காரணம் காட்டி வருகின்றனர். மனச்சான்று உள்ள பல பேருக்கு தெரியும். பல நீதிமன்றங்கள் நீர்நிலையில் தான் கட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை, உச்ச நீதிமன்றம், பல அரசு குடியிருப்புகள், வள்ளுவர்கோட்டம் நீர்நிலைகளை அக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் உள்ள 4 சமாதிகளை யார் இடிப்பது? அது ஆக்கிரமிப்பா? இல்லையா? மனச்சான்று உள்ளவர்கள் கூறுங்கள்.
ஒவ்வொருவரும் கடற்கரையில் இரண்டு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளீர்கள். கடற்கரை எப்படி கல்லறையாக மாறியது. யாருமே கேட்கவில்லையே? என சீமான் கேள்வி எழுப்பினார்.
''இங்குள்ள மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்" - திருமுருகன் காந்தி!
இது குறித்து மே 17 இயக்கம் ஒருங்கினைப்பாளர் திருமுருகன் காந்தி கூறும்போது, '' மக்களுக்கு ஆதரவாக யாருமே வரவில்லை. நீதிமன்றம் உத்தரவு என்று கூறும் நிலையில் எத்தனை நீர்நிலைகளில் தனியார் கட்டுமான நிறுவனங்கள், கல்லூரிகள், கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன? ஏழை, எளியோர் வாழ்நாள் சேமிப்பில் கட்டிய வீடுகளை இடித்து அவர்களை புலம் பெயந்து செல்ல காரணமாக உள்ளனர்.
மக்கள் பிரிதிநிதிகளும் வரவில்லை. அமைச்சரும் இதில் தலையிடவில்லை. இங்கு இருக்கும் பொது மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்." என்று திருமுருகன் காந்தி கூறினார்.
''அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்"- தமிழ்நாடு அரசு!
இந்த நிலையில் அடையாறு கரையோரம் உள்ள வீடுகளை அப்புறப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ) வெளியிட்ட அறிவிப்பில், ''அடையாறு நதியை முழுவதுமாக புனரமைத்து கரையோரம் உள்ள பகுதிகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நீர்வாழ் உயிரினங்கள் வாழும் சிறந்த சூழலை உருவாக்க வேண்டும் என்றால் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதன் மூலம் மாசுபடுவதை தடுக்க கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.
இதையும் படிங்க: சுவருக்கு பள்ளம் தோண்டிய இடத்தில் 'பாம்'; மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் போலீஸ்!
இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் மறு குடியமர்விற்கு ஒப்புதல் தராத ஆக்கரமிப்பாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அரசின் இந்த செயலுக்கு அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.