சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளின்படி தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, அவர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்க முடியாது என கல்லூரிக் கல்வி இயக்குநர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், கல்லூரிகளில் முழுநேரப் பேராசிரியர் நியமனத்தின் போது தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் கௌரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ் தொடர்ந்த வழக்கில், கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளின் படி சம்பளம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர் ராதிகா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு எழுப்பிய கேள்விக்கு, பதில் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக் கல்வி இயக்குநர் சுந்தரவல்லி அளித்த அந்த பதிலில், "பல்கலைக் கழக மானியக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் படி அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 மதிப்பூதியம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதின்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உயர் கல்வியில் சாதிக்கும் தமிழ்நாடு... பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஆர்வம்!
மேலும் கௌரவ விரிவுரையாளர்களின் பணி நியமனம் அந்தந்த கல்லூரி முதல்வர்களால் வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக மானியக்குழு நடைமுறைப்படி தேர்வுக் குழு அமைக்கப்பட்டு அதன்மூலம் கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வுச் செய்யப்படவில்லை. எனவே, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டுமே மதிப்பூதியம் வழங்கி வருகிறது. எனவே, மானியக்குழு வழங்க பரிந்துரைத்த மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டியதில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய தமிழ்நாடு அனைத்து அரசு கல்லூரி யுஜிசி தகுதி கௌரவ விரிவுரையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தங்கராஜ், "தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு கல்லூரிகளில் பல்கலைக்கழக எழுத்து தேர்வு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 75 சதவிகிதம் கல்லூரிகளில் பல்கலைக்கழகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தமிழக உயர்கல்வித் துறை ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஊதியம் இல்லாமல் கவுரவ விரிவுரையாளர்களை பணிபுரிய நிர்பந்தம் செய்வதால், மே மாதம் பெரும்பாலான அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக தேர்வு பணிகளை புறக்கணித்துள்ளனர்.
ஒரு சில கல்லூரிகளில் கல்லூரி முதல்வர்கள் அங்கு பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்களிடம் மே மாதம் ஊதியம் இல்லை என்றாலும் கூட கட்டாயமாக நீங்கள் வேலை பார்க்க வர வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். குறிப்பாக அரசு கல்லூரிகளில் 25 மாணவர்களுக்கு ஒரு தேர்வு கூட கண்காணிப்பாளர் இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான கல்லூரிகளில் 45 முதல் 60 மாணவர்களுக்கு ஒரு தேர்வு கூட கண்காணிப்பாளர் என்று நியமிக்கப்பட்டுள்ளனர். மே மாதம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் தரப்படுவதும் இல்லை. பணி அனுபவம் தரப்படுவதும் இல்லை. இதனால் இந்த வருடம் பெரும்பாலான கல்லூரிகளில் மே மாதம் மட்டும் பெரும்பான்மையான கௌரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லூரி பணிகளை புறக்கணித்துள்ளோம்"என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.