மதுரை: ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் பிரதமரின் வீடு வசதி திட்டத்தில் மோசடி செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த துரைசாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில், "திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி ஊராட்சியில் பிரதமரின் வீடு வசதி திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் மத்திய அரசின் 100 நாள் வேலை உறுதி அளிப்புத் திட்டத்தில் கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இந்த திட்டங்களில் கல்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர் இணைந்து மோசடி செய்து வருகின்றனர்.
பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் கனவு இல்ல திட்டம் ஆகியவற்றுக்கு வீடு வசதி இல்லாதவர்கள் தான் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கல்வார்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே சொந்த வீடுகளில் வசிப்போர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு அவர்கள் புதிய வீடு கட்டுவதற்கு வேலை உத்தரவு பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் அரசு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டுவதற்காக வேலை உத்தரவு பெற்றும் மோசடி செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - அனுமதி அளிக்காததால் அதிமுக வெளிநடப்பு!
ஏழை எளிய மக்கள் சொந்த வீட்டில் வசிப்பதற்காக அரசு கொண்டு வரும் திட்டங்களில் மோசடி செய்து அரசு பணத்தை தங்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த மோசடி குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். ஆனால், மோசடி செய்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த திட்டங்களில் நிதி மோசடி செய்த கல்வார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சுகுனா, ஊராட்சி மன்ற செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,"என மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், "திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், மனுதாரரின் புகார் மனுவை பரிசீலித்து சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,"என்று உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்