சென்னை: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் இறுதி விசாரணை வரும் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியின் போது 1996-2001ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். அப்போது அவர் வருமானத்திற்கும் அதிகமாக ரூ. 1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக, 2002 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை வேலூருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட வேலூர் நீதிமன்ற நீதிபதி, "பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. எனவே அவர்களை விடுதலை செய்கின்றேன்," என்று தீர்ப்பளித்தார்.
அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, "அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் விளக்கத்தை கேட்காமல் வேலூருக்கு வழக்கு மாற்றப்பட்டது. எனவே இதற்கு குற்றம் சாட்டப்பட்டவர் பொறுப்பாக மாட்டார்,"என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதையும் படிங்க: அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
மேலும், "இந்த வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் ஏற்கனவே 70 சதவிகித விசாரணையை முடித்திருந்த நிலையில், வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு வழக்கின் எஞ்சிய அம்சங்களின் மீது விசாரணை நடந்து தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே, அவசர கதியில் ஐந்து நாட்களில் தீர்ப்பளிக்கப்பட்டதாக கூற இயலாது என்று வேலூர் நீதிமன்ற நீதிபதியே மனு தாக்கல் செய்துள்ளார்" என்றும் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "ஒரு மாவட்டத்தில் உள்ள வழக்கை அந்த மாவட்டத்தின் நிர்வாக நீதிபதிகள், வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியுமா? அனைத்து நீதிபதிகள் அடங்கிய குழு முன் வைக்காமல், தலைமை நீதிபதி, வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற ஒப்புதல் வழங்க முடியுமா? என்பது குறித்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பொன்முடியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் பதில் அளிக்க வேண்டும்.
வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்ற முடியும் என்றால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த விசாரணையும் நடத்த முடியாது. 5 நாட்களில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அந்த தீர்ப்பை ரத்து செய்ய முடியாது,"என்றும் நீதிபதி கூறினார். இதனையடுத்து இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை வரும் 17ஆம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்