சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, ''கூடா நட்பு கேடா போகும், அது யாருக்கு என்று உங்களுக்கு தெரியும்'' என பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், ''கூடா நட்பு கேடாய் போகும் என உங்கள் தலைவர் (கருணாநிதி) தான் சொன்னார். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு, ஆனால் அது வேறு ஒரு சிரிப்பும் தெரிகிறது'' என்றார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ''ஆணவச் சிரிப்பு என்று மட்டும் சொல்லுங்கள். அதனை ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் நீங்கள் சொன்ன மற்றொரு சிரிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ஆர்.பி.உதயகுமார், ''அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு என்று சொன்னீர்கள். ஆனால் இன்று உங்களைப் பார்த்து (திமுக) மக்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என விமர்சித்தார்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, ''மக்கள் சிரித்தால் நல்லது தான்'' என தெரிவித்தார். இறுதியாக எழுந்து நின்று பேசிய எஸ்.பி. வேலுமணி, ''1999 இல் நீங்கள் யாருடன் கூட்டணி வைத்திருந்தீர்கள்? அது என்ன நட்பு'' என கேள்வி எழுப்பினார். அத்துடன் இந்த விவாதம் நிறைவு பெற்றது.
இதையும் படிங்க: அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யப் போகிறாரா செந்தில் பாலாஜி? சட்டப் பேரவையில் நடந்த 'திடீர்' மாற்றம்!
முன்னதாக எஸ்.பி. வேலுமணி கேள்வி நேரத்தின்போது, '' கோவை மேற்கு புறவழிச்சாலையில் 3 பிரிவாக பணிகள் நடக்கின்றன. முதல் கட்ட பகுதியில் ஏறக்குறைய பணிகள் நிறைவடைந்து விட்டன. 2 வது மற்றும் 3 வது பிரிவு பிரிவு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். கோவை மேற்கு புறவழிச்சாலை மற்றும் பாலக்காடு சாலையை இணைக்கும் விதமாக பாலத்தை விரைவாக அமைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, '' கோவை புறவழிச்சாலை திட்டத்தை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாலும், திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே நில எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார். கோவை புறவழிச்சாலை திட்டத்தில், முதல்கட்டமாக 12 கி. மீ நீளத்திற்கு நடைபெறும் பணிகள் இன்னும் 3 மாதத்தில் நிறைவுபெறும் என்றும், இரண்டாம் கட்ட பகுதியில் 10 கி.மீ நீளத்திற்கு நிலம் எடுப்பு நிறைவுற்றுள்ள நிலையில், நிர்வாக அனுமதி கிடைத்தவுடன் டெண்டர் கோரப்படும் என தெரிவித்தார். மூன்றாம் கட்ட பிரிவில் 10 கி.மீ சாலையில் 70 சதவீத நில எடுப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில், 80 சதவீத நில எடுப்பு முடிந்தவுடன் அதற்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கும்'' என அமைச்சர் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்