நீலகிரி: நீலகிரியில் மேற்கொள்ளப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில், 14 வகையான நீர்வாழ் பறவைகளில் 135-ம், 148 வகையான நிலவாழ் பறவைகளில் 3 ஆயிரத்து 23 எண்ணிக்கையிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
அழகிய இயற்கை இடங்களையும், வளமான உயிர் சூழல் மண்டலமாக விளங்கும் நீலகிரி மலைத் தொடர், தாவரங்கள் மற்றும் வனவிலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. இப்பகுதியில் உள்ள கல்லார், மாமரம், குஞ்சப்பனை, முள்ளூர், சேதுப்பேட்டை, ஓரசோலை, கட்டபெட்டு, பெட்டட்டி, உள்ளிட்ட பகுதிகள் பறவைகள் அதிகம் வாழும் பகுதியாக உள்ளன.

இப்பகுதிகள், ஊர் மரங்கொத்தி மயில், மைனா, மாடப்புறா, செம்போந்து, கொண்டைக் குருவி, ஊதா தேன் சிட்டு,மீன் கொத்தி, கிளி, செதில் மார்பக முனியா உள்ளிட்ட பல்வேறு பறவைகளின் வாழ்விடமாக திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் மார்ச் மாதத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன்படி, 2025 ஆம் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு மார்ச் 8, 9 தேதிகளில் நீர்வாழ் பறவைகள் மற்றும் மார்ச் 15, 16 தேதிகளில் நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் மாநிலம் முழுவதும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

நீலகிரியில் பறவைகள் கணக்கெடுப்பு:
இதில், நீலகிரியில் வனத்துறை சார்பில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தது. இந்த கணக்கெடுப்பில், கூடலூர் வனக்கோட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கூடலூர் வனக் கோட்டத்தில் மாவட்ட வன அலுவலரின் அறிவுரையின்படி, நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக 20 நீர்நிலைப் பகுதிகளும், நிலவாழ் கணக்கெடுப்பு பணிக்காக 23 இடங்களும் தேர்வு செய்யப்பட்டு உயிரியலாளர், தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை பணியாளர்கள் மூலம் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று முடிவடைந்தது.
அதிகரித்து வரும் பறைவைகளின் எண்ணிக்கை:
இக்கணக்கெடுப்பின் படி, 14 வகையான நீர்வாழ் பறவைகளில் 135 எண்ணிக்கையிலும், 148 வகையான நிலவாழ் பறவைகளில் 3 ஆயிரத்து 23 எண்ணிக்கையிலும் உள்ளது கணக்கெடுக்கப்பட்டது. அதன்படி, பறவைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த வருடத்தில் அதிகரித்துள்ளது.
அரிய வகை மலை இருவாச்சி:
இதில், வேதிவால் குருவி, ஊர் மரங்கொத்தி மயில், மைனா, மாடப்புறா, செம்போத்து, செம்மார்பு குக்குறுவான், கொண்டைக்குருவி, ஊதா தேன்சிட்டு, பச்சை குக்குருவான், கொண்டை வளத்தான், உண்ணிக்கொக்கு மற்றும் வெண்மார்பு மீன் கொத்தி போன்ற பறவைகள் காணப்பட்டன. மேலும், சாம்பல் இருவாச்சி (Malabar grey hornbill) மற்றும் அரிய வகையான மலை இருவாச்சி (Great hornbill) பறவைகளும் இந்த கணக்கெடுப்பில் காண முடிந்ததாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.