சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்ப்பதாக வாக்குறுதி வழங்கி 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக 4 ஆண்டுகளில் தங்களது கோரிக்கைகளை, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முன்வரவில்லை. தனியார்மய நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அரசின் இந்த முடிவு தமிழக மக்களின் நலனுக்கும் விரோதமானது என அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து பிரச்சனைகளையும் அரசு தீர்வு காண வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆகஸ்டு 2023 ஆம் ஆண்டு முடிவடைந்துவிட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய ஒப்பந்தம் அமலுக்கு வர வேண்டும்.
பேச்சுவார்த்தையை நடத்த வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய பின்பு இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. வருகிற 27 ஆம் தேதி 12 மணி நேர உண்ணாவிரத போராட்டம் அறிவித்தித்திருந்த நிலையில், தற்போது வருகிற 29 ஆம் தேதி அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
திமுக வாக்குறுதி:
அதிமுக ஆட்சி காலத்தில் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி CITU, LPF உள்ளிட்ட கூட்டமைப்பு சங்கங்களால் 4 முறை வேலைநிறுத்தம் நடத்தப்பட்டும், நியாயமான கோரிக்கைகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த போராட்டத்தை ஆதரித்த திமுக, தனது தேர்தல் அறிக்கையிலும், தேர்தல் பிரச்சாரத்திலும், போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் தீர்ப்பதாக வாக்குறுதி வழங்கி 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் 4 ஆண்டு திமுக ஆட்சியில் பெரும்பகுதியான கோரிக்கைகளை, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண அரசு முன்வரவில்லை. தனியார்மய நடவடிக்கைகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அரசின் இந்த முடிவு தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் விரோதமானதாகவே CITU கருதுகிறது. எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
சுமார் ரூ.2,700 கோடி வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகை 2025 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை CITU வரவேற்கிறது. போக்குவரத்து கழகங்களின் நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, ஓய்வூதிய நிதி உள்ளிட்ட தொகை சுமார் 15 ஆயிரம் கோடியை போக்குவரத்து கழக நிர்வாகங்கள் செலவு செய்துவிட்டன. 2023 ஜூன் மாதத்திற்கு பின்பாக ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு 22 மாத காலமாக ஓய்வுக்கால பலன் நிலுவையில் உள்ளது.
கோரிக்கைகள்:
அதேபோல் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு வழங்கும் அகவிலைப்படியை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயரும்போது அந்த உயர்வை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் 60 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முழுமையான அகவிலைப்படி உயர்வை வழங்குவதுடன். அரியர்ஸ் தொகை வழங்குவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
அதேபோல் பணியில் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக்காப்பீடு, ஊதிய ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்துவது, குறைந்தபட்ச ஓய்வூதியம் போன்ற ஓய்வூதியர்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் எவ்வித ஓய்வூதியமும் இல்லாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு மட்டுமே உள்ளது என்பதை அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே, இந்த ஒப்பந்தத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாவதை உறுதிப்படுத்த வேண்டும்.
வாரிசு வேலை:
தமிழகத்தில் உள்ள மற்ற துறை ஊழியர்களை விட போக்குவரத்து தொழிலாளர்களின் ஆரம்ப நிலை ஊதியம் குறைவாக உள்ளது. நீண்ட காலமாக வாரிசு வேலை அனைத்து பிரிவிலும் மறுக்கப்பட்டு வருகிறது. வாரிசு வேலை பிரச்சனைக்கு தீர்வு காண அதிமுக அரசில் போடப்பட்ட 8 அரசாணைகளை ரத்து செய்து, வாரிசு வேலைக்கு காத்திருக்கும் அனைவருக்கும் வாரிசு வேலை வழங்க வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வரும் பொதுத்துறை போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தவும், கடந்த பல ஆண்டுகளாக வஞ்சிக்கப்பட்டு வரும் போக்குவரத்து ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு காணவும் அரசு முன் வர வேண்டுமென CITU கேட்டுக் கொள்கிறது.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.